[X] Close

‘மூச்சு வாங்குதுன்னு குதிரையில் போனா வடிவேல் ரேஞ்சுக்கு ஆக்கிடுச்சே சை’ சலித்துக்கொண்ட போலீஸார்: மெரினாவில் ஒரு காமெடி ஆபரேஷன்


merina-comedy-operation

குதிரையில் ஏறும் போலீஸ். | படம்: எல்.சீனிவாசன்

  • kamadenu
  • Posted: 31 Mar, 2018 22:12 pm
  • அ+ அ-

சீரியசான ஒரு விஷயம் சில போலீஸாரின் செயலால் காமெடியாகிப் போனது. புகைப்படம் எடுக்கச் சென்ற எனக்கு கிடைத்த அனுபவம் வடிவேலு படம் பார்த்தது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

இன்று மதியம் காவிரி பிரச்சினை காரணமாக மெரினாவில் போரட்டக்காரர்கள் கூடுவார்கள் என்று அலர்ட் இருந்ததால் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். வெயில் சற்று அதிகம் தான். எல்லோரும் மாலை வரை பாதுகாப்புப் பணியில் இருந்தார்கள்.

கடற்கரைக்கு பொதுமக்கள் குடும்பத்துடன் வர ஆரம்பித்தார்கள். இனிமேல் எங்க போராட்டக்காரர்கள் வரப்போகிறார்கள் என்ற எண்ணத்தில் போலீஸார் நின்று கொண்டிருந்தனர்.  “என்ன ஏட்டய்யா ஏதோ பசங்க வரப் போகிறார்களாமே” என்று தொந்தியுடன் இருந்த ஒருவர் வாயைப் பிடுங்கினேன்.

“அட அது எப்போதும் சொல்றதுதாம்பா? இந்தப் பசங்களுக்கு வேலை இல்லை” என்று சொல்ல ஆரம்பித்தார். அப்போதுதான் என் செல்போனில் ஃபேஸ்புக் பக்கம் பார்த்தேன். மெரினா கடற்கரையில் கடலுக்கு அருகே போராட்டம் நடப்பது லைவ் ஆகிக் கொண்டிருந்தது.

 “ஏட்டய்யா அந்தப் பசங்களுக்கு வேலை இல்லைன்னு சொன்னீங்கள்ல, இப்ப அவர்கள் உங்களுக்கு வேலை கொடுத்துவிட்டார்கள் ஓடுங்கள்” என்று ஃபேஸ்புக்கைக் காட்டினேன். “அய்யோ இது என்ன நாம இங்கதானே நிற்கிறோம், இவர்கள் எப்படிப் போனார்கள் என்று தலையிலடித்துக் கொண்டார்.”

ஓடுங்க ஓடுங்க என்று நான் சொல்ல “இந்த வெயில்லயும், மணல்லயும் எங்க ஓட” என்று சலித்துக்கொண்டவர் மணற்பரப்பில் ஓட்டமும் நடையுமாகச் சென்றார். போலீஸார் அனைவரும் வயர்லெஸ் கட்டளையை ஏற்று மணற்பரப்பில் ஓடினர். அப்போது தான் அந்தக்காட்சியை கவனித்தேன்.

 குதிரை வாடகைக்கு ஓட்டும் மூன்று குதிரைக்காரர்களைப் பிடித்து போலீஸார் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த ரணகளத்தில் இவர்கள் ’ ‘கடமை’யை அவ்வளவு சிறப்பாகச் செய்கிறார்களா? எதாவது படம் தேருமா? என்று கேமராவை தயார் செய்து அருகில் சென்றேன்.

ஆனால், அவர்கள் ‘அதற்காக’ சண்டை போடவில்லை என்று தெரிந்தது. “குதிரையை ஓட்டுடா, சீக்கிரம் கடற்கரை ஓரம் போய் ஒரு ரெண்டு மூன்று பேரையாவது பிடிக்கணும்” என்று கூற அதற்கு குதிரைக்கார இளைஞர்கள் “சார் நீங்க போராட்டக்காரர்களை பிடிக்க எங்க குதிரைதான் கிடைத்ததா? சனிக்கிழமை ஏதோ கூட்டம் வரும் நாலு காசு சம்பாதிக்கலாம்னு பார்த்தா இடைஞ்சல் செய்கிறீர்களே” என்று கோபப்பட்டனர்.

“டேய் நாட்ல எவ்வளவு முக்கியமான விஷயம் நடக்குது அக்யூஸ்ட்டை பிடிக்க உன் குதிரை உதவுச்சுன்னா போட்டோவெல்லாம் வரும்டா” என்று கூற “எனக்கு எதுக்கு சார் போட்டோ, அதோ ஓடுகிறார்களே அவர்கள் எல்லாம் போலீஸ் இல்லையா?” என்று அவர்கள் கேட்க, “டேய் எங்களால மணல்ல ஓட முடியல மூச்சு வாங்குதுன்னு தானே கேட்கிறோம்” என்று கேட்க அரைகுறை மனதுடன் அந்த குதிரைக்காரர்கள் சம்மதித்தனர்.

குதிரை கிடைத்தவுடன் ஒரு ஆயுதப்படை காவலர் ஒருவர் கடற்கரை காந்தி சிலை தலையே இடிக்கும் அளவுக்கு காலை வீசி குதிரையில் ஏறிய அழகு இருக்கே உடனே கிளிக்கி விட்டேன். அதன் பின்னர் 3 போலீஸாரும் குதிரையில் ஏறிப் பறக்க மன்னிக்கவும் அது இடத்தை விட்டு நகரவே இல்லை.

“டேய் என்னடா நகர மாட்டேங்குது” என்று போலீஸார் குதிரைக்கார இளைஞனைப் பார்த்துக் கேட்க, அவர் “நான் தான் சொன்னேனில்ல சார், நான் தான் நடத்தி கூட்டிட்டு போகணும்” என்று கூற “சும்மா இரு எனக்கு தெரியும் நான் ட்ரெய்னிங்கல கராத்தே, கும் கும், குதிரையேற்றம் எவ்வளவு பார்த்திருக்கேன் தெரியுமான்னு” அவர் குதிரையை ஓட்டிச்சென்றார்.

ஏம்பா நல்லாத்தானே ஓட்டிக்கிட்டு போகிறார்கள், போய் போராட்டக்காரர்களைப் பிடிக்கப் போகிறார்கள் உனக்குத்தானேப்பா பேரு என்று நான் கேட்டேன். அடப்போங்க சார், இப்ப பாருங்க அவர்கள் கடற்கரைக்குப் போவதாக நினைத்து தானே போகிறார்கள், அந்த குதிரைங்க சரியா ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு இங்க வந்து நிக்குதா இல்லையான்னு பாருங்க என்று கூறினார் அந்த இளைஞர்.

நான் என்னடா வடிவேல் படத்தில் என்னத்த கன்னையா சொல்வது போல் “வருவான் இரும்மா வருவான்” என்பது போல் சொல்கிறாரே என்று நம்பாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன ஆச்சர்யம், சரியாக குறிப்பிட்ட தூரம் சென்ற குதிரைகள் ஒரு வட்டம் போட்டு திரும்ப ஹேய் ஹேய் ட்ரூ ட்ரூன்னு குரல் கொடுத்துக்கொண்டே போலீஸார் திருப்பப் பார்க்க, குதிரைகள் ‘ஆட்டோக்காரரைப் பார்க்கும் ஆர்டிஓ போல’ அசட்டையாக தனது எஜமானனிடம் வந்து நின்றது.

“டேய் என்னடா இது புறப்பட்ட இடத்துக்கே வந்து நிக்குது என்ன குரல் கொடுத்தாலும் கேட்க மாட்டேங்குது” என்று போலீஸார் அந்த குதிரைக்கார இளைஞர்களிடம் எகிற “சார் சும்மா இருங்க சார் ஆறறிவுள்ள அக்யூஸ்டே உங்க பேச்சைக் கேட்க மாட்டேங்கிறான், ஐந்தறிவு குதிரைகிட்ட எகிறுகிறீர்களே, நான் தான் சொன்னேன் அல்லவா இது ஒரு ரவுண்டுக்கு மட்டும் பழக்கப்பட்டது  அங்கெல்லாம் போகாதுன்னு சொன்னேன் அல்லவா” என்று எரிச்சலுடன் கூற எனக்கு வந்த சிரிப்பை அடக்க நான் பட்டபாடு சொல்ல முடியாது.
 
“அட என்னப்பா உள்ளதும் போச்சே இது மேல ஏறி போய் போராட்டக்காரர்களை பிடித்தால், குதிரையில் ஜோராக வந்து பிடித்தார்னு எவனாவது ஒருத்தன் செல்போனில் எடுத்து வாட்ஸ் அப்புல போட்டுடுவான், ஏதாவது பேரு வாங்கலாம்னு பார்த்தா இது இப்படி மக்கர் செய்து விட்டதே, மூச்சு வாங்குகிறதுன்னு குதிரையில் போனா வடிவேல் ரேஞ்சுக்கு ஆக்கிடுச்சே சை” என்று சலித்துக்கொண்டே புலம்பியபடி என்று குதிரைக்காரர்களிடம் குதிரையை ஒப்படைத்துவிட்டுச் சென்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close