அரசு வேலைக்கு முயற்சி செய்பவரா நீங்கள்? - டிஎன்பிஎஸ்சி தேர்வு விடைத்தாளில் புதிய மாற்றங்கள்!


சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு உதவும் வகையில் ஓஎம்ஆர் விடைத்தாளில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான மாதிரி விடைத்தாள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஓஎம்ஆர் விடைத்தாளில் புதிய மாற்றங்களை டிஎன்பிஎஸ்சி கொண்டுவந்துள்ளது. புதிய ஓஎம்ஆர் விடைத்தாளின் மாதிரி படிவம் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) ‘OMR Answer Sheet-Sample’ என்ற தலைப்பின் கீழ் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

தேர்வர்கள் 4 இலக்க வினாத் தொகுப்பு எண்ணை அதற்குரிய வட்டங்களில் கறுமை நிற பால் பாயின்ட் பேனாவை பயன்படுத்தி கருமையாக்க வேண்டும். மேலும், விடைத் தாளின் முதல் பக்கத்தில் பகுதி-2ல் உறுதி மொழி அளித்து கையொப்பமிட வேண்டும். தேர்வாணையத்தால் இனிமேல் நடத்தப்பட இருக்கும் அனைத்து ஓஎம்ஆர் முறை தேர்வுகளிலும் பங்கேற்கும் தேர்வர்கள் புதிய மாதிரி ஓஎம்ஆர் விடைத் தாளினை நன்கு பார்த்து, அறிந்து கொண்டு தேர்வெழுதுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

x