நகைச்சுவை நடிகர் முத்துக்காளை சினிமா உலகிற்கு வந்த பிறகும் படிப்பைக் கைவிடாமல் அதன்மீதுள்ள ஆர்வத்தால் கடந்த ஏழு ஆண்டுகளில் முயன்று சாதித்து மூன்று பட்டங்களை பெற்று தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி உள்ளார்.

ராஜபாளையத்தில் பிறந்த முத்துக்காளை, கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றவர். சினிமாவில் சண்டைப் பயிற்சியாளராக வேண்டும் என்ற ஆசையில் தனது 18வது வயதில் சென்னைக்கு வந்தார். சினிமாவில் சண்டைப் பயிற்சியாளராக சில காலம் பணியாற்றிய அவர் 1997ம் ஆண்டு பொன்மனம் படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு என் உயிர் நீதானே, நிலவே முகம் காட்டு போன்ற படங்களில் நடித்தார்.
இப்படி சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டு இருந்தவரை, வடிவேலுவுடன் ஏற்பட்ட நட்பு பிரபல நகைச்சுவை நடிகராக்கியது. வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்து பிரபலமானார். செத்து செத்து விளையாடலாம் என்ற இவரது காமெடி மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனது. ஆனால், அரசியல் மேடையில் பேசியதன் காரணமாக வடிவேலுக்கு மார்க்கெட் குறைந்ததைத் தொடர்ந்து முத்துக்காளைக்கும் படவாய்ப்பு இல்லாமல் போனது. அதனால் இவரை திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை.

இந்நிலையில் படவாய்ப்பு இல்லாத காலத்தில் படிப்பு மீதான தனது ஆர்வத்தை பூர்த்தி செய்திருக்கிறார் முத்துக்காளை. படிப்பில் கவனத்தைத் திருப்பிய இவர் 2017ம் ஆண்டு தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. வரலாறு பாடத்தில் இரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். அதன் பிறகு 2019ம் ஆண்டு எம்.ஏ. தமிழ் படித்து அதிலும் முதல் வகுப்பில் தேச்சி பெற்றுள்ளார்.
தற்போது 58 வயதான முத்துக்காளை அண்மையில் வெளிவந்த பி.லிட் என்ற தமிழ் இலக்கியம் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறு வயதில் இருந்தே பட்டதாரி ஆக வேண்டும் என்ற ஆசை கொண்ட முத்துக்காளை தனது கனவை 50 வயதுக்குப்பிறகு நிறைவேற்றியிருக்கிறார். சாதிக்க வயது ஒரு தடை இல்லை என்பதை முத்துக்காளை நிரூபித்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...