வெள்ளம் காரணமாக புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு புதிதாக விலையில்லா புத்தகங்கள் வழங்குமாறு உத்தரவிட்டுள்ள தமிழ்நாடு அரசு, மாணவர்கள் பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே செல்லாதவாறு பார்த்து கொள்ளுமாறு தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் ஏராளமான பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. வருகிற 11-ம் தேதி சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையடுத்து, பள்ளி கட்டிடங்களில் சேதங்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்யவும், மழைநீர் தேங்கியிருந்தால் அதை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவும், பள்ளியில் உள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளதா என்பதை ஆய்வு செய்யவும் இன்று பள்ளிகளுக்கு வருமாறு அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்படிருந்தது.
இந்நிலையில், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக மாணவர்கள் பலரது புத்தகங்கள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனால், அந்த மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, யாரும் பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே செல்ல அனுமதிக்க வேண்டாம் எனவும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பள்ளியில் உள்ள பழமையான மரங்களை அகற்றவும், சேதமடைந்த கட்டிடங்கள் குறித்த தகவல்களை உடனடியாக அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி! இளைஞரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற விஜய் பட வில்லன்!