12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேரலை - முறைகேடுகளை தடுக்க மாநில அரசு திட்டம்!


ஒடிசாவில் பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் முறைகேடு செய்வதை தடுக்க தேர்வை நேரலை செய்ய ஒடிசா மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

தேர்வு அறையில் சிசிடிவி பொருத்தப்பட்டு ஏற்கனவே கண்காணிக்கப்படும் நிலையில், வெப்காஸ்ட் மூலம் நேரலை செய்யப்படுகிறது. சட்டமன்ற தேர்தலின் போது, வாக்குப்பதிவு வெப்காஸ்ட் மூலம் நேரலை செய்யப்படுவது போல் தேர்வு நடப்பதை நேரலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, தேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், நடப்பு ஆண்டில் உயர்நிலைக் கல்வி கவுன்சிலின் (CHSE) 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நேரடியாக ஒளிபரப்ப செய்ய ஒடிசா மாநில அரசு முடிவு செய்துள்ளது.

சிசிடிவி கேமரா

ஏற்கெனவே, தேர்வு அறையில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், வெப்காஸ்ட் மூலம் நேரலை செய்யப்பட உள்ளது. வருடாந்திர தேர்வுகளை நடத்துவதை கருத்தில் கொண்டு, 2024ல் வெளிப்படையான முறையில், உயர்நிலைக் கல்வி தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதன்மூலம் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளின் ஸ்ட்ராங் ரூம் , மைய கண்காணிப்பாளர் அலுவலகம், தேர்வு அறைகள் மற்றும் அனைத்து ஆய்வகங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளை பதிவு செய்வது கட்டாயமாகும்.

இது தவிர, உயர்நிலைக் கல்வி கவுன்சில், பள்ளி மற்றும் கல்வித் துறை, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் உள்ள அதிகாரிகள் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணித்து, இந்த நிகழ்வுகள் அனைத்தையும் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும்.

மேலும், தேர்வு அறை, ஸ்ட்ராங் ரூம், ஆய்வகங்களில் சிசிடிவி நிறுவப்படாவிட்டால் பொருத்துமாறு உயர்நிலைப் பள்ளி அதிகாரிகளுக்கு உயர்நிலைக் கல்வி கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. கேமரா சோதனை செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.

ஒடிசா மாநிலத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 1,000 க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடத்தப்படும் என்றும், இதில் 3.70 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதுவார்கள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


x