அரசு பள்ளி வகுப்பறையில் கசியும் மழைநீர் - மாணவர்கள் சிரமம் @இளையான்குடி


சாலைக்கிராமத்தில் மழை நீர் கசியும் அரசு பள்ளி வகுப்பறை மேற்கூரை.

இளையான்குடி: சாலைக்கிராமத்தில் அரசு மேல் நிலைப் பள்ளி வகுப்பறையில் மழைநீர் கசிவதால் மாணவர்கள் சிரமமடைந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சாலைக்கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 30 கிராமங்களைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள், 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர்.

மேல்நிலைப் பிரிவு மாணவர்களுக்கான ஆய்வகம் சிதிலமடைந்ததால், அக்கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. தற்போது பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் 10-ம் வகுப்புக்கான ஆய்வகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 7-ம் வகுப்பு மாணவர்கள் அமர்ந்திருந்த வகுப்பறை கட்டிடம் முற்றிலும் சேதமடைந்தது. கடந்த சில தினங்களாக பெய்த மழையில் அந்த வகுப்பறை மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசிந்து வருகிறது.

இதனால் அம்மாணவர்கள் பள்ளி அலுவலக அறையில் அமர்த்தப்பட்டனர். அப்பள்ளியில் மாணவர்கள் இடநெருக்கடியில் தவித்து வருகின்றனர். கூடுதலாக 6 வகுப் பறைகளை கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து பெற்றோர் சிலர் கூறியதாவது: சாலைக்கிராமம் அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், அதற்கேற்ப கட்டிட வசதி இல்லை. பள்ளிக்கு பட்டா இல்லாததால் கட்டிடம் கட்டுவதில் பிரச்சினை இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

பல ஆண்டுகளாக போராடி சமீபத்தில் பள்ளிக்கு பட்டா கிடைத்தது. அதன் பின்னரும் கட்டிடங்கள் கட்டாததால் மாணவர்கள் சிரமத்தில் உள்ளனர். சில கட்டிடங்கள் பயன்படுத்த முடியாதவையாக உள்ளன. அவற்றை இடித்துவிட்டு புதிய வகுப்பறைகள் கட்ட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘நன்கொடையாளர் மூலம் 2 வகுப்பறை கட்டிடங்களை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

x