கோவை அரசு கலைக் கல்லூரியில் சேர வெளி மாவட்ட மாணவர்கள் ஆர்வம்: 10 ஆண்டுகளில் 80% ஆக உயர்வு


பிரதிநிதித்துவப் படம்

கோவை: கோவை அரசு கலைக் கல்லூரியில் சேர வெளி மாவட்ட கிராமப் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 80 சதவீத வெளி மாவட்ட மாணவர்கள் இக்கல்லூரியில் சேர்ந்துள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை அரசு கலைக் கல்லூரி கடந்த 1852-ல் ஆங்கிலேய அரசால் தொடங்கப்பட்டது. சுமார் 172 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கல்லூரி 1987-ல் தன்னாட்சி அந்தஸ்தும், 2012-ல் நாக் கமிட்டியின் ‘ஏ கிரேடு’ அங்கீகாரமும் பெற்றது. இக்கல்லூரியில் பி.ஏ. பிரிவில் தமிழ், ஆங்கில இலக்கியம், வரலாறு, சுற்றுலா பயண மேலாண்மை, பொருளாதாரம், அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், ராணுவப் படிப்புகள், வணிக நிர்வாகம் ஆகிய 9 படிப்புகளும், பி.எஸ்சி. பிரிவில் தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல், கணிதம், உளவியல், புவியியல், புள்ளியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில் நுட்ப உள்ளிட்ட 11 படிப்புகளும், பி.காம். பிரிவில் பி.காம், கணினி பயன்பாட்டியல், சர்வதேச வணிகம் ஆகிய மூன்று படிப்புகளும் என 23 பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

சுமார் 23 இளநிலை பட்ட படிப்புகளில் 1,433 இடங்களுக்கு மாணவர்சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 6-ம் தேதிதொடங்கியது. இன்று (மே 20) விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இதுவரை 15 ஆயிரத்துக்கும்மேற்பட்ட மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இக்கல்லூரியில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒசூர், அரூர் ஆகிய கிராமப் பகுதிகளில்இருந்தும், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்தும் மாணவ, மாணவிகள் அதிகளவில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இது குறித்து, கோவை அரசு கலைக் கல்லூரி முதல்வர் உலகி கூறியதாவது: கோவை அரசு கலைக் கல்லூரியில் வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிகளவில் சேர்ந்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 80 சதவீத வெளி மாவட்ட மாணவர்கள் இக்கல்லூரியில் சேர்ந்துள்ளனர். கிராமப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளை கோவை அரசு கலைக் கல்லூரியில் சேர்க்க அதிகம் ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.

கோவை அரசுக் கல்லூரியில் சேர்ந்தால் படிக்கும் போதே, பகுதி நேர வேலை செய்துஊதியம் ஈட்டலாம் என்ற எண்ணமும் மாணவர்களிடம் உள்ளது. இங்கு அதிகமான சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் இருப்பதால், பிளஸ் 2 தேர்வு முடிவு வந்தவுடன் தங்களுக்குப் பிடித்தமான கல்லூரிகளில் சேர்ந்து விடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, அரசியல் அறிவியல் துறை தலைவரும், ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்புகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தி வரும் பேராசிரியருமான கனகராஜ் கூறியதாவது: தமிழகத்தில் அரசு கலைக் கல்லூரியில் தரவரிசைப் பட்டியலில் சென்னை மாநிலக் கல்லூரிக்கு அடுத்து, கோவை அரசு கலைக் கல்லூரி 2-ம் இடத்தில் உள்ளது. தேசிய தர வரிசைப் பட்டியலில் 44-ம் இடத்தில் உள்ளது. கல்லூரியில் சேர, முன்னர் நேரில் வந்து விண்ணப்பம் பெறும் நிலை இருந்தது. இதனால் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நேரில் வந்து விண்ணப்பம் வாங்க முடியாமல் இருந்தனர்.

தற்போது ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை வந்துவிட்டதால், சொந்த மாவட்டங்களில் இருந்தவாறு விண்ணப்பிக்க முடிகிறது. அரசுக் கல்லூரியில் கல்விக் கட்டணம் மிகவும் குறைவாகும். அரசு உதவித் தொகை வழங்கப்படுவதால், கல்விக் கட்டணத்தை ஈடு செய்ய முடிகிறது. இலவச சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சியும் வழங்கப்படுகிறது. கல்லூரி இரு வேளைகளாக செயல்படுவதால், மாணவர்கள் பகுதி நேர வேலைக்கு செல்வதில் ஆர்வம் காண்பிக்கின்றனர். எளிதாக வேலை வாய்ப்பும் கிடைக்கிறது, என்றார்.