கட்டி முடித்து 3 மாதத்தில் பெயர்ந்து விழுந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை @ காஞ்சிபுரம்


கருவிமலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டிடம்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கட்டி முடிக்கப்பட்ட 3 மாதங்களில் பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. அந்த நேரத்தில் மாணவர்கள் இறை வணக்கத்துக்கு சென்றிருந்ததால் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்பட்டவில்லை.

காஞ்சிபுரம் அருகே குருவிமலை பகுதியில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் குருவிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 90 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு ரூ. 61லட்சத்து 73 ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் 3 வகுப்பறை கட்டிடம் கடந்த மார்ச் மாதம் கட்டி திறக்கப்பட்டது. இந்த புதிய கட்டிடத்தில் 6 முதல் 8-ம் வகுப்புவரை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர்.

அவர்கள் தங்கள் பாடப்புத்தகங்களை பள்ளி அறையில் வைத்துவிட்டு காலை இறை வணக்க நிகழ்ச்சிக்கு சென்றனர். அப்போது 7-ம் வகுப்பு மாணவர்கள் அமரும் அறையின் மேற்கூரை பெயர்ந்து கீழே விழுந்தது. அப்போது வகுப்பறையில் மாணவர்கள் யாரும் இல்லாததால் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படவில்லை. உடனடியாக மாவட்ட ஆட்சியர் இந்த கட்டிடத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

ரூ.61 லட்சத்துக்கு கட்டப்பட்ட கட்டிடம் 3 மாதங்களில் பெயர்ந்து விழும் வகையில் தரமற்ற முறையில் கட்டிய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தரமற்ற முறையில் இந்த கட்டிடம் கட்டப்பட்டிருந்தால் இடித்து தள்ளிவிட்டு புதிய கட்டிடத்தை கட்டித் தர வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தினர். இந்தப் பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் கோமளாவிடம் புகார் தெரிவித்தனர்.