மதுரை: சட்டசபை நிகழ்வை பார்க்க சென்னைக்கு விமானத்தில் பறந்த மாநகராட்சி பள்ளி மாணவர்கள்


பள்ளி மாணவர்கள்

மதுரை: கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளை விமானத்தில் அழைத்த சென்று தமிழ்நாடு சட்டசபை நிகழ்வுகளை காண்பதற்கு மாநகராட்சி வாய்ப்பு ஏற்படுத்த உள்ளது. அவர்களை மாநகராட்சி மேயர் இந்திராணி பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தார்.

இன்று உலகமே செல்போன் வடிவில் உள்ளங்கைக்கு வந்துவிட்டாலும், விமானப்பயணம், நடுத்தர, ஏழை மக்களுக்கு இன்னும் எட்டாக்கனியாக இருக்கிறது. வானத்தில் பறக்கும் விமானங்களை பார்த்து வியந்து பார்க்கும் நிலையிலே அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உள்ளனர்.

அவர்களை கல்வியில் சிறந்த விளங்க ஊக்குவிக்கும் விதமாக சமீப காலமாக அவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் அல்லது பள்ளி நிர்வாகங்கள், ஸ்பான்சர்கள் உதவியுடன் அரசு பள்ளி மாணவர்களுக்கு விமானத்தில் பயணம் செய்யும் சந்தப்பத்தை ஏற்படுத்தி கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடப்பு கல்வியாண்டில் 8 மற்றும் 9ம் வகுப்பில் கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் 9 பேரை மாநகராட்சி நிர்வாகம், மதுரை ரோட்டரி மிட் டவுண் கிளப் உதவியுடன் சென்னைக்கு அழைத்து சென்று தமிழக சட்டசபை நிகழ்வுகளையும், கல்வி முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தலங்களுக்கு சுற்றிப்பார்க்க அழைத்து சென்று அசத்தியுள்ளது.

இந்த விமானப்பயணத்தில் மதுரை மாநகராட்சி ஈ.வெ.ரா மாநகராட்சி பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி கோபிகாஸ்ரீ, கஸ்தூரிபாய்காந்தி மாநகராட்சி பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி வர்சினி, பொன்முடியார் மாநகராட்சி பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி சுல்தானா ராபிகா, அனுப்பானடி மாநகராட்சி பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி புவனேஸ்வரி, வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவி வர்சினி, சேதுபதி பாண்டித்துரை மாநகராட்சி பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவர் பாண்டிச்செல்வம், சாத்தமங்கலம் மாநகராட்சி பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவர் சந்தானகுமார், திரு.வி.கா.மாநகராட்சி பள்ளி 9ஆம் வகுப்பு மாணவர்கள் ஜெய் கார்த்திக், ஸ்ரீகுமரன் ஆகிய 9 மாணவ, மாணவிகள் மற்றும் திரு.வி.க.மாநகராட்சி பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ரெஜினா உள்பட மொத்தம் 10 பேர் இடம்பெற்றிருந்தனர்.

இவர்கள் சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு சட்டபேரவை நிகழ்வுகள், அருங்காட்சியகம், மெரினா கடற்கரை, உள்ளிட்ட முக்கிய இடங்களை சுற்றிப்பார்த்தனர். மாணவ, மாணவிகளை வழியனுப்பும் நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் சுவிதா, கல்விகுழுத் தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் ரகுபதி, மக்கள் தொடர்பு அலுவலர்மகேஸ்வரன், மதுரை ரோட்டரி டவுண் கிளப் சங்கத் தலைவர் சிவசங்கர், செயலாளர் லெனின் குமார், பொருளாளர் சந்திரசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.