கிண்டி எம்ஜிஆர் மருத்துவ பல்கலை.யில் ரத்த அழுத்த மேலாண்மை பயிற்சி படிப்பு தொடங்கப்படும்: துணை வேந்தர் நாராயணசாமி தகவல்


உலக உயர் ரத்த அழுத்த தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பணியாளர்கள், பொதுமக்களுக்கு இலவச பரிசோதனை விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்த துணைவேந்தர் மருத்துவர் கே.நாராயணசாமி, ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொண்டார்.

சென்னை: உலக உயர் ரத்த அழுத்த தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பணியாளர்கள், தொழிலாளர்கள், பொதுமக்களுக்கான இலவச பரிசோதனை வசதி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சேவையை பல்கலைக்கழக துணைவேந்தர் கே.நாராயணசாமி தொடங்கி வைத்து, ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொண்டார். அப்போது, அவர் கூறியதாவது: இந்தியாவில் 4 பேரில் ஒருவர் உயர்ரத்த அழுத்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 12 சதவீதம் பேர் மட்டுமே ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், புற்றுநோய், சர்க்கரை நோய், இதய நோய், மாரடைப்பு போன்றவற்றாலும் பாதிக்கப்படுகின்றனர்.

ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், இதயத்துக்கு செல்லும் ரத்தம், ஆக்சிஜன் அளவு குறையும். இதன் காரணமாக, நெஞ்சுவலி, மாரடைப்பு, இதய துடிப்பில் மாற்றம், இதயம் - சிறுநீரக செயலிழப்பு, திடீர் உயிரிழப்பு ஆகியவை ஏற்படலாம்.

தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவ திட்டம் மூலமாக 40 லட்சம் பேர் உயர் ரத்த அழுத்த நோயாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர். தற்போது, 1.2 கோடி பேர் தொடர் சிகிச்சை பெறுகின்றனர்.

முறையாக உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, புகை பிடித்தல், மது அருந்துதல் மட்டுமின்றி காற்று, நீர், ஒலி, ஒளி மாசு மூலமாகவும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். எனவே, இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம்.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலையில், ‘உயர் ரத்த அழுத்தமேலாண்மை’ தொடர்பான ஓராண்டு பயிற்சி படிப்பு தொடங்கப்பட உள் ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் வருகை பதிவு செய்யும் இடத்தில், நிரந்தரமாக ரத்த அழுத்த பரிசோதனை கருவி அமைக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் எப்போது வேண்டுமானாலும் ரத்த அழுத்தத்தை இங்கு பரிசோதித்துக் கொள்ளலாம்.

இதுபோல, அனைத்து அரசு, தனியார் அலுவலகங்களிலும் பணியாளர் நலன் கருதி, ரத்த அழுத்த பரிசோதனை கருவியை நிறுவலாம். இதற்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் செலவாகும். இவ்வாறு அவர் கூறினார்.