நம்ம ஊரு நம்ம பள்ளி திட்டத்துக்கு இதுவரை ரூ.300 கோடி நன்கொடை: அன்பில் மகேஸ் மகிழ்ச்சி


கோவளம்: தமிழக முதல்வர் நம்ம ஊரு நம்ம பள்ளி திட்டம் அறிவித்து ஒன்றரை ஆண்டுகளில் அவர்மீது நம்பிக்கை கொண்ட கொடையாளர்கள் இது வரை அந்தத் திட்டத்துக்கு ரூ.300 கோடி வழங்கியுள்ளதாக தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

கோவளத்தில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் எஸ்.டி.எஸ். பவுண்டேசன், ரவுண்ட் டேபிள் இந்தியா ஆகிய தொண்டு நிறுவனங்கள் சார்பில் ரூ.1. கோடியே 23 லட்சம் செலவில் புதியதாக கட்டப்பட்ட 4 வகுப்பறைகள், இருபால் மாணவர்களுக்கான நவீன கழிப்பிடம் ஆகியவற்றை கோவளம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் சோபனா சுந்தர் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். அப்போது கழிப்பிடத்தில் மாணவிகளுக்கு நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டதை பார்வையிட்டு தொண்டு நிறுவனங்களின் செயல்பாட்டையும் அமைச்சர்கள் பாராட்டினார்.

அப்போது மாணவர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், “பெரும்பாலும் கடந்த காலங்களில் போதிய பள்ளி வகுப்பறைகள் இல்லை போதிய கழிப்பறைகள் இல்லை என விமர்சனங்கள் எழுந்து வந்தது. ஆனால், தற்போது திமுக ஆட்சி அமைந்த பிறகு ரூ.7,500 கோடி செலவில் புதிய வகுப்பறைகள் பள்ளி கட்டிடங்கள் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றார் போல் கழிப்பிட வசதிகள் அனைத்தும் கட்டித் தரப்பட்டு இன்று கல்வியில் தமிழ்நாடு முதல் மாநிலமாக விளங்கி வருகிறது. அதற்குக் காரணம் தமிழ்நாடு முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தான்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “பொதுமக்களின் பங்களிப்புடன் நடைபெறும் அரசு திட்டங்களால் நாடு விரைந்து வளர்ச்சி பெறுகிறது. தமிழக முதல்வர் நம்ம ஊரு நம்ம பள்ளி திட்டம் அறிவித்து ஒன்றரை ஆண்டுகளில் அவர்மீது நம்பிக்கை கொண்ட கொடையாளர்கள் இது வரை ரூ.300 கோடியை அந்தத் திட்டத்துக்காக வழங்கியுள்ளனர். தனியார் தொண்டு நிறுவனங்கள் கட்டித்தரும் பள்ளி வருப்பறைகள், கழிவறைகளை ஒவ்வொரு மாணவ மாணவியரும் தன் சொந்த பொறுப்பில் பாதுகாத்து பயன்படுத்த வேண்டும். தண்ணீரை சிக்கனமாய் பயன்படுத்த வேண்டும். பள்ளி வகுப்பறை, கழிப்பிடத்தை தூய்மையாக வைத்து பயன்படுத்த வேண்டும்” என்றார்