முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி: ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம்


சென்னை: 2024 - 2025ம் ஆண்டுக்காக முழுநோக் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி DCM (REGULAR) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த செய்திக் குறிப்பு: சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024 - 2025ம் ஆண்டுக்கான முழுநேரச் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி (Diploma in Cooperative Management) தொடங்கப்படவுள்ளது. இந்த பயிற்சிக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் 10.06.2024 முதல் 19.07.2024 வரை www.tncu.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தில் கோரியுள்ள விவரங்களை விடுதலின்றி அனைத்து கலங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து விண்ணப்பக் கட்டணமாக ரூ.100/- இணையதளம் மூலம் செலுத்தி சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் அலுவலக நாள் மற்றும் நேரத்தில் நேரில் அல்லது பதிவு அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

இப்பயிற்சிக்கான குறைந்தபட்ச கல்வி தகுதி +2 தேர்ச்சி ஆகும் மற்றும் 01.08.2024 அன்று 17 வயது பூர்த்தி செய்து இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் சேரலாம்.

இருபாலருக்கும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை. அரசு நிர்ணயித்துள்ள இடஒதுக்கீட்டின்படி சேர்க்கை மேற்கொள்ளப்படும். கூட்டுறவு பட்டயப் பயிற்சி ஓராண்டு 2 பருவ முறைகளாக (முதல் பருவம் / 6 மாதம் / 5 பாடங்கள் - இரண்டாம் பருவம் / 6 மாதம் / 5 பாடங்கள்) நடத்தப்படும். இதற்கான பயிற்சிக் கட்டணம் மொத்தம் ரூ. 18750/- ஆகும்.

இப்பயிற்சி தமிழில் மட்டுமே பயிற்சியளிக்கப்படும். பயிற்சிக்கான தேர்விளையும் தமிழில் மட்டுமே எழுத வேண்டும். மேலும், விவரங்களுக்கு சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண். 215 பிரகாசம் சாலை பிராட்வே சென்னை - 600 001 என்ற முகவரியிலோ அல்லது 044-25360041 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) அ.அனுசுயாதேவி தெரிவித்துள்ளார் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.