ஒருங்கிணைந்த எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகள் பயிற்றுவிக்க கல்லூரிகளுக்கு அனுமதி: ஏஐசிடிஇ அறிவிப்பு


பிரதிநிதித்துவப் படம்

சென்னை: ஒருங்கிணைந்த எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளை பயிற்றுவிக்க கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

இது குறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) உறுப்பினர் செயலர் ராஜீவ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: தேசிய கற்றல் தரமதிப்பீடு கட்டமைப்பு (என்சிஆர்எப்) வரையறையின்படி ஒருங்கிணைந்த இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான கால அளவு 5 ஆண்டுகளாகும். அதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான பாடத்திட்டம் மற்றும் கற்றல் தரமதிப்பீடு கட்டமைப்பை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உருவாக்கியுள்ளது.

இதையடுத்து ஒருங்கிணைந்த எம்.சி.ஏ மற்றும் எம்.பி.ஏ படிப்புகளுக்கு விண்ணப்பித்த அனைத்து கல்லூரிகளுக்கும் யுஜிசியின் விதிகளின்படி வெளியேறும் வாய்ப்புடன் 5 ஆண்டுகால படிப்புக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதில் யுஜிசியின் வெளியேறும் வாய்ப்பு என்பது ஒரு மாணவர் படிப்பின் இடையே எப்போது வேண்டுமானாலும் வெளியேறிவிட்டு மீண்டும் சேரலாம். ஒவ்வொரு ஆண்டுக்கு ஏற்ப அந்த மாணவருக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.