மதுரை: பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்காக வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தி, அவர்களை துணைத் தேர்வு எழுத வைத்து, நடப்பு கல்வி ஆண்டுக்குள் உயர் கல்வி படிக்க வைக்க மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா புது முயற்சி எடுத்துள்ளார்.
மதுரை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,091 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இவர்களில் 1,954 பேர் மட்டும் தேர்ச்சிப் பெற்றள்ளனர். 137 பேர் தேர்ச்சிப் பெறவில்லை. மாநகராட்சி பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் அதிகப்பட்சமாக 590 வரை மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர். ஆனாலும், 109 மாணவ, மாணவிகள், ஒரே ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சிப் பெறாமல் பிளஸ் 2 தேர்வில் கோட்டை விட்டுள்ளது, மாநகராட்சி நிர்வாகத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த பிறகு, மாநகராட்சி பள்ளிகளில் படித்து தேர்ச்சிப் பெறாத மாணவ, மாணவிகளை பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை. அவர்களில் விரல் விட்டு எண்ணக் கூடிய மிக சிலரே மீண்டும் துணைத் தேர்வு எழுதி, உயர் படிப்புகளுக்கு தொடர்வார்கள் அல்லது பிளஸ் 2 மட்டும் தேர்ச்சிப் பெற்றுவிட்டு கிடைக்கிற வேலைகளுக்கு செல்வார்கள். பலர் தோல்வியடைந்ததும், அடுத்து பிளஸ் 2-க்கான துணைத் தேர்வு கூட எழுதுவதில்லை. அதற்கான வழிகாட்டுதல்கள் கூட கிடைக்காமல் மாணவ, மாணவிகள் பலரின் எதிர்காலம் வீணாகி வந்தது.
இந்நிலையில், மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா, மாநகராட்சி பள்ளிகளில் படித்து பிளஸ் 2 தேர்வில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயர்க் கல்விக்கு வழிகாட்டுவதற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், தோல்வியடைந்தவர்களுக்கும் வழிகாட்டி, அவர்களை பிளஸ் 2 தேர்ச்சிப் பெற வைத்து உயர் கல்விக்கு அனுப்பும் புது முயிற்சியை மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா எடுத்துள்ளார்.
அதன்படி, தோல்வியடைந்த மாணவர்களுக்கு மதுரை செல்லமுத்து அறக்கட்டளை மனநல மருத்துவமனை மூலம், சிறப்பு ‘கவுன்சிலிங்’ வழங்க ஏற்பாடு செய்துள்ளார். வரும் ஜூன் மாதம் 20ம் தேதி துணைத் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை மாணவர்கள் சிறப்பாக எழுதும் வகையில், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களை தினமும் சிறப்பு வகுப்பு எடுக்க மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தோல்வியடைந்த மாணவர்களுக்கான துணைத் தேர்வு கட்டணத்தை, மாநகராட்சி பள்ளி நிர்வாகமே செலுத்தி அவர்களை 100 சதவீதம் துணைத் தேர்வில் தேர்ச்சிப்பெற வைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதற்காக, மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா, பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்து, மாநகராட்சி நாவலர் சோம சுந்தர பாரதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் துணை தேர்வுகளை எப்படி எழுதுவது, அதன் பிறகு உயர்க்கல்வி தொடர்பான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்சியில் தோல்வியடைந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் ஆணையாளர் சித்ரா கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசும்போது, “பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்தாலும் அவமானப்பட்டு வீட்டில் முடங்கி கிடக்காமல், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று துணைத் தேர்வு எழுதி எப்படியும் உயர் கல்வி படிக்க வேண்டும் என்ற ஆர்வமாக நிகழ்ச்சிக்கு வந்துள்ளது பாராட்டுக்குரியது. இதுவே வெற்றிக்கான முதல் படி. தேர்வுகளில் தோல்வியடைந்தவர்கள் தான் பிற்காலத்தில் பல வரலாறுகளை படைத்துள்ளனர்.
பிளஸ் 2 தோல்வியோடு கல்வி முடிந்துவிடுவதில்லை. அடுத்து கல்லூரிகளில் எப்படி சேருவது என்ற கவலை உங்களுக்கு வேண்டாம். நீங்கள், இந்த துணைத் தேர்வுகளில் தேர்ச்சிப் பெறுவதை மட்டும் நோக்கமாக கொண்டு படியுங்கள். உங்களை மாநகராட்சி நிர்வாகமே கல்லூரிகளில் சேர்த்துவதற்கு ஏற்பாடு செய்யும். அதனால், அச்சமின்றி துணைத் தேர்வுக்காக படியுங்கள். உங்களுக்கு ஆசிரியர்கள் வழிகாட்டுவார்கள்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், கல்வி அலுவலர் ஜெய்சங்கர், கல்விக்குழு தலைவர் ரவிச்சந்திரன், கவுன்சிலர் சுதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.