வண்டலூர்: பிளஸ் 2 பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற வண்டலூர் அருகே குமிழியில் செயல்படும் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் பழங்குடியின மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம், குமிழியில் மத்திய, மாநில அரசுகளின் நிதியில் ரூ.17 கோடியில் 15 ஏக்கரில் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது. கல்வியில், சுகாதரத்தில், அடிப்படை வசதிகளில் பிந்தங்கிய நிலையிலுள்ள பழங்குடி, இருளர், நரிக்குறவர் மற்றும் மலைவாழ் சமூகத்தை முன்னேற்றும் நோக்கில் அமைக்கப்பட்ட பள்ளியானது, பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கி வருகிறது.
இந்நிலையில், பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை (ஆங்கில வழியில்) வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இப்பள்ளியில் இந்த கல்வியாண்டுக்கான மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு, நடைபெறுகிறது. பழங்குடியின மாணவ, மாணவியருக்கு, ஆங்கில வழிக் கல்வி, சீருடை, உணவு, தங்கும் இட வசதியுடன் இதர கட்டணங்கள் அனைத்தும் அரசால் வழங்கப்படுகிறது.
எனவே, இப்பள்ளியில் சேர விருப்பமுள்ள பழங்குடியின மாணவ, மாணவியர் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி தலைமை ஆசிரியரை 96263 29172 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த ஆண்டு நடைப்பெற்ற பிளஸ் டூ தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக, பள்ளி தலைமை ஆசிரியர் பி.வெங்கடேஷ்வரன் கூறியது: குமிழி ஊராட்சியில் செயல்படும் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் மாணவ - மாணவியருக்கு தனித்தனி விடுதி, தனித்தனி கழிப்பறைகள், விளையாட்டு திடல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தங்கும் இடம், உணவு, பாடப் புத்தகம், நோட்டுப் புத்தகம், சீருடைகள், காலணிகள், டை, பெல்ட், துணி சோப்பு, குளியில் சோப்பு, தேங்காய் எண்ணெய், டூத் - பேஸ்ட் வழங்கப்படும்.
நூலகம் மற்றும் 'ஸ்மார்ட்' வகுப்பு மூலம் கல்வி, அனைத்து வசதியுடன் கூடிய விளையாட்டு மைதானம், நாட்டு நடப்பு அறிய விடுதியில் 'எல்.இ.டி.,- டிவி' வசதி, மாணவர்கள் தங்குவதற்கு இரண்டு அடுக்கு கட்டில், மெத்தை, போர்வை, தலையணை. மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வைக்க சிறப்பு பயிற்சி, 'நீட்' உள்ளிட்ட அனைத்து திறனறித்தேர்வுகள் மற்றும் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இது போன்ற தனியார் பள்ளிக்கு நிகரான வசதி உள்ளது. அனைத்து இலவசம் தற்போது சேர்க்கை 6ம் வகுப்பு முதல் 11 வகுப்பு வரை சேர்க்கை நடைபெறுகிறது. இதனை பழங்குடியினர் பயன்படுத்தி கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.