தஞ்சாவூர் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரிப்பு


படம்: மெட்டா ஏ.ஐ

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மொத்தம் 167 அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு அரசு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், புதிதாக பல்வேறு பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக, விண்ணப்பித்த பல மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காமல், அதிக நன்கொடை கொடுத்து தனியார் கல்லூரிகளில் சேர வேண்டிய நிலை இருந்து வருகிறது.

இதையடுத்து, இக்கல்லூரிகளில் காலை மற்றும் மாலை நேர வகுப்புகளை தொடங்கவும், அதற்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்தவும், கல்லூரி வளாகத்தில் மாணவர் சேர்க்கை உதவி மையம் தொடங்கவும் கல்லூரி கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் அ.ஜான்பீட்டர் கூறியபோது, “எங்கள் கல்லூரியில் இந்த ஆண்டு இரண்டாவது பேட்ஜ் ஆக பிஎஸ்சி வேதியியல், பிஎஸ்சி விலங்கியல், பிஎஸ்சி தாவரவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தலா 40 இடங்களுடன் புதிய வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல, பிபிஏ பாடப்பிரிவிலும் 60 இடங்களுடன் இரண்டாவது பேட்ஜ் தொடங்கப்பட உள்ளது. இதனால் இவ்வாண்டு முதல் கூடுதலாக 300 பேர் கல்லூரியில் சேர அனுமதிக்கப்படுவர். இதன் மூலம் இக்கல்லூரியில் மொத்த மாணவியர் சேர்க்கைக்கான இடங்கள் 1,564 ஆக உயர்த்தப்பட்டுள்ளது” என்றார்.

தஞ்சாவூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் ரோசி கூறியபோது, “அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அதிகளவில் மாணவர்கள் பயில வேண்டும் என்பதற்காக தமிழக அரசு கூடுதலாக இடம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரியில் 180 இடங்கள், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் 300 இடங்கள், கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் 60 இடங்கள், பேராவூரணி அரசு கலைக் கல்லூரியில் 140 இடங்கள், கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் 230 இடங்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதேபோல, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளிலும் இவ்வாண்டு கூடுதலாக மாணவர்கள் பயில இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன” என்றார்.

x