[X] Close
 

இதுவும் ஒரு கொலைதான்!


tasmac-murder-dinesh

  • kamadenu
  • Posted: 09 May, 2018 09:01 am
  • அ+ அ-

தமிழக அரசின் அதி தீவிர மது விற்பனைக் கொள்கை மற்றுமொரு உயிரைக் காவு வாங்கியிருக்கிறது. இம்முறை பலியாகியிருப்பது வாலிபப் பருவத்தின் லட்சியக் கனவுகளை இதயத்தில் தேக்கி வைத்திருந்த மாணவன் தினேஷ்!

தந்தையின் குடிப்பழக்கத்தால் உண்டான பாதிப்பு, அவனைத் தூக்கு மாட்டித் தொங்கத் தூண்டியிருக்கிறது. ‘தந்தையே! குடிப் பழக்கத்திலிருந்து இனியாவது மீளுங்கள்’ என்று இறுதிக் கடிதத்தில் கண்ணீர் வேண்டுகோள் வைத்ததோடு... ‘மதுக் கடைகளை எல்லாம் மூடுங்கள். இல்லையேல் ஆவியாக வந்தாவது அவற்றை நான் மூடுவேன்’ என்று அரசை நோக்கிக் கதறியிருக்கிறான் அந்த அப்பாவி மாணவன்.

அந்தரத்தில் ஊசலாடிய தினேஷின் சடலம் எதன் குறியீடு? வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே துடித்துக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான குடிநோயாளிகளின் குடும்பங்களை அல்லவா அந்தக் காட்சி பிரதிபலிக்கிறது!

சொல்லப்போனால், தினேஷின் மரணம் படுபாதகக் கொலை! மதுவால் நேரிடும் மரணங்களைக் கண்ணெதிரில் தொடர்ந்து பார்த்த பிறகும், மனம் இரங்காத ஆட்சியாளர்கள்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். முதியவர் சசிபெருமாளின் ‘அலைபேசி கோபுர’ அகால மரணம் தொடங்கி, இப்போது தினேஷின் தற்கொலை வரை எதுவுமே இவர்களைச் சலனப்படுத்தவில்லையே!

மாறாக, மது விற்பனையைத் தடைகள் ஏதுமின்றித் தொடர்வதற்காக அவர்கள் சட்டப் போராட்டம் அல்லவா நடத்திக்கொண்டிருக்கிறார்கள்!

மதுவால் செத்து மடியும் சடலங்களின் மீது வைத்துத்தான் சர்க்கார் கஜானாவை நிரப்ப முடியும் என்றால், அது தாயின் மார்பறுத்துப் பிள்ளைக்குப் பாலூட்டுகிற கொடூரத்துக்குச் சமம் அல்லவா!

தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்காகத் தெருவில் இறங்கிப் போராடும் அத்தனை அமைப்புகளும் ஒன்று திரண்டு, மதுக் கடைகளை மூடச் சொல்லி நெஞ்சதிரக் குரல் கொடுக்க வேண்டிய நேரம் அல்லவா இது? தமிழர்கள் பிழைத்திருந்தால்தானே, அவர்களுக்கான உரிமைப் போராட்டங்களுக்கும் ஒரு பொருள் இருக்கும்?



தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close