[X] Close

தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக கோயில் அறங்காவலர் நியமனம் நிறுத்தம்: இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை


election

  • kamadenu
  • Posted: 18 Mar, 2019 12:38 pm
  • அ+ அ-

தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக கோயில்களில் அறங்காவலர்கள் நியமனத்தை இந்து சமய அறநிலையத் துறை நிறுத்தி வைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் 40,000-க்கும் மேற்பட்ட கோயில்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுபாட்டின்கீழ் உள்ளன. இந்தக் கோயில்களில் பல ஆண்டுகளாக அறங்காவலர்கள் குழு நியமிக்கப்படவில்லை. தக்கார் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்றம் உத்தரவு

இதனால், நிர்வாக சீர்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான, வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அறங்காவலர்களைத் தேர்வு செய்வதற்கான மாவட்ட கமிட்டியை அமைக்க அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, மாவட்ட கமிட்டி அமைப்பதற்கு அனுமதி கேட்டு இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் தமிழக அரசுக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து, அறங்காவலர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் தேதி கடந்த வாரம் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு, புதிய அறிவிப்புகள், நியமனங்கள் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளக் கூடாது. எனவே, அறங்காவலர் நியமனத்தை இந்துசமய அறநிலையத் துறை நிறுத்தி வைத்துள்ளது.

இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக அறங்காவலர்களை நியமனம் செய்ய முடியாது. எனவே, அறங்காவலர்கள் நியமனத்தை நிறுத்தி வைத்துள்ளோம். இருப்பினும், அறங்காவலர் பதவியிடங்களுக்காக இதுவரை வந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

விண்ணப்பங்களை ஆய்வு செய்து தயாராக வைத்திருப்போம். தேர்தல் முடிந்து, மாவட்ட கமிட்டி அமைக்கப்பட்டவுடன் அறங்காவலர்கள் உடனடியாக நியமிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close