[X] Close

எல்லோருக்கும் சந்தோஷம் வேண்டும்... ஆனால்...


diwali-celebrations

  • kamadenu
  • Posted: 05 Nov, 2018 17:11 pm
  • அ+ அ-

தீபாவளி என்றாலே பட்டாசு, பட்டாசு என்றாலே கொண்டாட்டம். இந்தக் கொண்டாட்டத்திலும் கைவைத்துவிட்டதே உச்சநீதிமன்றம் என்பதுதான் பலரது கருத்தாக இருக்கிறது. சட்டம் போட்டுவிட்டால் போதுமா, ஒவ்வொரு வீட்டிலும் வந்து காவல் இருக்க முடியுமா, இது சாத்தியமா என்றும் பல்வேறு விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

ஆனால், இது சட்டம் சார்ந்த விஷயமோ, அல்லது நிர்வாகம் சார்ந்த விஷயமோ அல்ல. மாறாக ஒவ்வொரு தனி நபரின் ஆரோக்கியத்தோடும் தொடர்புடையது. காற்று மாசுபடுவதால் பாதிக்கப்படுவது யார் என்பதையே நாம் மறந்துவிடுகிறோம்.

காற்று மாசுபடுவதால் ஏற்படும் பிரச்சினைகளை அறிந்துகொள்ள ஒவ்வொரு மெட்ரோ நகரங்களிலும் உள்ள மக்களின் ஆரோக்கியத்தைக் கணக்கிட்டால் தெரிந்துவிடும். எத்தனை பேருக்கு ஆஸ்துமா இருக்கிறது, எத்தனை பேருக்கு சுவாசக்கோளாறு இருக்கிறது, எத்தனை பேருக்கு காசநோய் இருக்கிறது என்பது அம்பலமாகிவிடும். இந்தக் கணக்கிடல் கூட வேண்டாம். ஒரே ஒரு நாள் நம்முடைய வாகனத்தை பிரதான சாலை ஒன்றில் நிறுத்திவைத்தால் போதும்.

அடுத்த நாள் அதன் நிலைமையைப் பார்த்தாலே தெரிந்துவிடும் காற்று எந்த அளவுக்கு மாசுபட்டிருக்கிறது என்பது. காற்றில் ஈரப்பதம் துளியும் இருப்பதில்லை.

டெல்லியில் மிகவிரைவில் காற்று மாசுபாடு அபாய கட்டத்தை எட்டப் போவதாக சமீபத்தில்   எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உலகின் அதிக காற்று மாசுபாடு அடைந்துள்ள நகரங்களில் பத்து நகரங்கள் இந்தியாவில் உள்ளன. பருவமழை வர வேண்டிய காலத்தில் வருவதில்லை, திடீரென்று கொட்டி தீர்த்து வெள்ளக்காடாக மாறுகிறது. வெயில் காலத்தில் குளிர்கிறது, குளிர்காலத்தில் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு வெயில் அடிக்கிறது. இப்படி இயற்கையே நம்மால் குழம்பிப் போயிருக்கிறது.

இங்கு மட்டுமல்ல உலகம் முழுவதுமே சுற்றுச்சூழல் மாசுபாடும், பருவநிலை மாற்றமும் பூதாகரமான விளைவுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. புவிவெப்பமயமாதலால் பனிப்பிரதேசங்கள் உருகி கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த விளைவுகளின் பாதிப்புகளைக் குறைப்பதற்காகத்தான் உலகம் முழுவதும்  சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வுகளுக்காகவும், அதற்கான சட்டங்களை உருவாக்கவும், அதைச் செயல்படுத்தவும் கோடி கோடியாக செலவிடப்படுகின்றன.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க எவ்வளவோ போராட்டங்கள், அதற்காக எவ்வளவோ உயிரிழப்புகள். அனைத்தையும் நாம் பார்த்து கடந்துகொண்டே இருக்கிறோம். ஒரு நிறுவனம் சுற்றுச்சூழலை சீரழிக்கும்போது நமக்கு கோபம் வருகிறது. ஆனால், அதே சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில் நம்முடைய பங்கும் இருக்கிறது என்பதை நாம் உணர்வதில்லை.

ஒவ்வொரு சுற்றுச்சூழல் சீர்கேடும் நம் வாழ்க்கையைத் தனிப்பட்ட முறையில் பாதிக்கின்றன. உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்து மருத்துவ செலவுகளை வைக்கிறது. உடல் ஆரோக்கியம் குறைவதால் நம்முடைய பணிகளைச் சரிவர செய்ய முடிவதில்லை.

இதனால் உற்பத்தி  பாதிக்கிறது. இதுதவிர சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும், அதன் பாதிப்புகளைத் தடுக்கவும் ஆகும் செலவுகள். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இவையனைத்தும் இறுதியில் தனிமனித மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

எல்லோருக்கும் சந்தோஷம் வேண்டும்... ஆனால் எந்த விதத்தில். பட்டாசு வெடிப்பது என்பது சில நிமிட சந்தோஷம். ஆனால், காற்று மாசுபாட்டால் ஏற்படும் துன்பம் வாழ்நாள் முழுவதும் தொடருவதோடு, அடுத்த தலைமுறையையும் அது பாதிக்கிறது. நீதிமன்ற உத்தரவைத் தாண்டி, ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் இயற்கையைப் பாதுகாக்கும் பொறுப்புடையவர்களாக மாற வேண்டும்.

பொறுப்புகளைப் பகிர்ந்துகொண்டால் எவ்வளவு பெரிய மாற்றமும் சாத்தியம்தான். அதை இந்த தீப ஒளித் திருநாளில் இருந்தே தொடங்கலாம். ஏனெனில் உலகம் என்பது எல்லோரும்தான். 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close