[X] Close

பட்டாசு வெடிக்காதீங்க... பிளாஸ்டிக்கை தொடாதீங்க..!-  கல்லூரிப் பிள்ளைகளின் ‘காட்டுக்குள்ளே தீபாவளி’


diwali-in-forest

  • kamadenu
  • Posted: 05 Nov, 2018 11:34 am
  • அ+ அ-

ரோகிணி

“உம் பேரென்ன?''
 ``சதீஸ்குமார்''
 ``உம்பேரு?''
``கலாவதி''
``சரி, தீபாவளிக்கு நீங்க என்ன செய்வீங்க?”
 “எண்ணெய் தேய்ச்சுக் குளிப்போம்... புதுச்சட்டை போட்டுக்குவோம்... அப்புறம் பலகாரம் சாப்பிடுவோம்...”
 “அப்புறம்?”
 “ஆங்... வெடி வெடிப்போம்...”
 “அச்சச்சோ அது தப்பாச்சே... காட்டுக்குள்ள யானை, புலி, கரடி எல்லாம் இருக்கு இல்லியா..?”
 “ஆமா...”
 “வெடிப்போட்டா அதெல்லாம் என்ன பண்ணும்?”
 “பயந்து ஓட்டமா ஓடும்...”
 “அப்படி அதை ஓட வைக்கிறது பாவம் இல்லியா..?”

”... ...”

 “அப்படி பயந்து ஓடற யானை, கரடி எல்லாம் அப்புறமா வந்து பட்டாசு வச்ச நம்மளை தேடித் தேடி மிதிக்கும் இல்லையா... நம்ம ஊட்டையெல்லாம் நொறுக்கும் இல்லியா..?”

 “ஆமா.. அப்ப தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காம என்னதான் செய்யறது..?”

 “அதைச் சொல்றதுக்குத்தான் நாங்க வந்திருக்கோம்...”

கோவையில் தனியார் கல்லூரி மாணவ - மாணவிகள், இப்படித்தான்  பட்டாசு இல்லாத தீபாவளிக் கொண்டாட்டத்தை வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடிகள் மத்தியில் கொண்டு செல்கிறார்கள். அங்குள்ள பள்ளிக்கூட வகுப்பறைகளையே பிரச்சார மேடைகளாக்கி, பட்டாசு இல்லாத தீபாவளியை, கொண்டாட்டங்களை, விளையாட்டு, ஆடல் பாடல்கள் மூலம் சொல்லிக் கொடுக்கிறார்கள். இந்த வருடம் கோவை ஆனைகட்டியில் பனப்பள்ளி, ஜம்பகண்டி, கொண்டனூர் ஆகிய பழங்குடியின கிராமங்களில் இந்த நிகழ்ச்சியை நடத்தினார்கள் கல்லூரி மாணவ - மாணவிகள்.

இதற்காக ஆனைகட்டி ஆலமரமேடு, கொண்டனூர் கிராமத்தை ஒட்டிய வெட்டவெளி வாழைமரம், வண்ண வண்ண பலூன்கள், குடைகள் விரிக்கப்பட்டு விழாக்கோலத்துக்கு மாறியிருந்தது. காலை பத்து மணிக்கு, அங்கிருக்கும் அரசு நடுநிலைப்பள்ளி வகுப்பறைக்குள் வந்த மாணவ - மாணவிகள், குட்டிப் பசங்களுக்கு பட்டாசு இல்லா தீபாவளி கொண்டாட்டங்களைக் கதைகள் மூலமும் எளிய விளையாட்டுகள் மூலம் சொல்லித் தந்தனர். யசோதா, ராகவி, ஷாலினி, சுஜிதா ஆகியோர் ‘இன் அவுட் கேம்ஸில்’ ஒரு வகுப்பறையைக் கலக்கிக்கொண்டிருக்க, நிக் ஷத், அஜய், மணிகண்டன், கிருஷ்ணகுமார், பிரகதீஷ், நவீன், ஜெகதீஷ்,கோகுலகிருஷ்ணன், விக்னேஷ், ஹரிஹர குமார் உள்ளிட்டோர் இன்னொரு டீமாகப் பிரிந்து வேறொரு வகுப்பறையில், ‘நீயா நானா?, பாட்டுக்குப் பாட்டு’ பயிற்சிகளைத் தந்தனர். இன்னொரு டீம் பள்ளியின் மேல்மாடியில் பழங்குடி மாணவிகளுடன் இணைந்து ‘குத்துப் பாட்டு’ போட்டுக் கொண்டிருந்தது.

 மதியம் பன்னிரண்டு மணி வரை இப்படி வகுப்பறையையே அமர்க்களப்படுத்தியவர்கள் அடுத்து, அத்தனை குழந்தைகளையும் வெட்ட வெளி விழா திடலுக்கு இழுத்துவந்து ஆடல் - பாடல் நடத்தி அலப்பரையைக் கொடுத்தார்கள். நகரத்திலிருந்து வந்திருந்த மாணவ மாணவியருடன் பழங்குடி குழந்தைகள் கூச்சநாச்சம் இல்லாமல் ஆலுமா டோலுமாவுக்கும் ஆட்டம் கட்டியதைப் பார்த்து பள்ளி ஆசிரியர்கள் மட்டுமில்லாது பழங்குடி மக்களும் பார்த்து பரவசப்பட்டனர்.

இந்தக் கொண்டாட்டங்களுக்கு இடையே,  இந்நிகழ்ச்சியை முன்னிலை நின்று நடத்திய உதவிப்பேராசிரியர் எஸ்.பிரபாத் ரஞ்சன்குமாரும் மாணவி தமிழ்தாரணியும் என்னிடம் பேசினார்கள்.

 “2016-ம் வருஷம் எங்க காலேஜ்ல ‘ஈகை’ என்ற அமைப்பை பசுமை தீபாவளி கொண்டாட்டத்துக்காகவே ஆரம்பிச்சாங்க. அதுல இறுதியாண்டு மாணவர்கள் பங்கேற்பு மட்டும்தான். முதல் வருஷம் காலேஜ் வளாகத்துக்குள்ளேயே பட்டாசு  இல்லா தீபாவளி, பிளாஸ்டிக் தவிர்ப்பு பத்தின விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தினோம். அந்த நிகழ்வுகள்ல கிராமத்துக் குழந்தைகளை எல்லாம் பங்கேற்க வச்சோம். போன வருசம்தான் இந்தக் கொண்டாட்டத்தை காட்டுக்குள்ள நடத்தி அங்குள்ள மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்னு முடிவு செஞ்சோம். 

அதன்படி போன வருசம் தூமனூர் பழங்குடி கிராமத்துக்குப் போனோம். அங்கிருக்கிற பள்ளிக்கூடத்தில் கிராமத்துக் குழந்தைகளையும் பெரியவங்களையும் கூட்டி ஒருநாள் முழுக்க இந்த நிகழ்ச்சியை நடத்தினோம். இந்த வருசம் இந்தக் கிராமத்துல நடத்தியிருக்கோம். பட்டாசு இல்லாம, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தாம தீபாவளி கொண்டாடாடுவது குறித்தும், பெண் பிள்ளைகள் பயமற்ற வாழ்க்கை வாழ்வது எப்படி எனச் சொல்லித் தருவதுதான் எங்களோட ஒரே கான்செஃப்ட்” என்று சொன்ன அவர்கள் திடலில் குதூகலித்துக் கொண்டிருந்த கிராமத்துக் குழந்தைகளோடு குழந்தையாய் கலந்தனர்.

விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்ட அத்தனை பிள்ளைகளுக்கும் பரிசுகளை வழங்கிக் குஷிப்படுத்தியதுடன், மதிய உணவும் மாலைச் சிற்றுண்டியும் தந்து மகிழ்வித்த மாணவ - மாணவிகள்,  “நீங்க எல்லாரும் நாங்க சொன்னபடிதான் தீபாவளியைக் கொண்டாடணும் சரியா..?” என்று கேட்டதும் ஆரவாரம் செய்து ஆமோதித்தார்கள் அந்தக் குழந்தைகள்!

விழா முடிந்து மாணவ - மாணவிகள் புறப்படத் தயாரானபோது, “இந்த வருசம் தீபாவளியை எப்படிக் கொண்டாடுவீங்க..?” என்று கேட்க, இப்படித்தான் கொண்டாடுவோம் என்பது போல் நடனமாடிக் காட்டினார்கள் பழங்குடி குழந்தைகள்.  “எப்படிக் கொண்டாட மாட்டீங்க?” எனக் கல்லூரிப் பிள்ளைகள் கேட்டதற்கு,  “வெடி வெடிச்சுக் கொண்டாட மாட்டோம்” என்று குழந்தைகளிடமிருந்து கோரஸாக பதில் வந்தது. 

வெடிக்காமத்தான் இருக்கோணும்!

கொண்டனூர் கிராமத்தில் தீபாவளிக்கு வெடி போடும் வழக்கம் உள்ளதா?, பெரியவர் கடலானிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன். “நான் பொடியனா இருக்கும்போது தடாகத்துக்குப் போய் (10 கி.மீ) 5 ரூபாய்க்கு பட்டாசு வாங்கினா ஒரு வாரம் வச்சு வெடிப்போம். அந்த அஞ்சு ரூபாயை சம்பாதிக்க அஞ்சு நாள் தோட்டங்காட்டுல பாடுபடோணும். இப்ப சுத்தியும் செங்கல்சூளைக இருக்கதால நல்ல சம்பளம் கிடைக்குது. பட்டாசுக்கடைகளும் பக்கத்துலயே வந்துடுச்சு. வண்டி வாகனத்துலயும் பட்டாசு கொண்டுவந்து விக்கிறாங்க. இந்த வருஷம்தான் இந்தப் பசங்க வந்து இப்படிச் சொல்லியிருக்காங்க. அதனால இந்த வருசம் பட்டாசு வெடிக்காமத்தான் இருக்கோணும்” என்றார் அவர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close