[X] Close

இது அக்பர் வீட்டுத் தீபாவளி


akbar-diwali

  • kamadenu
  • Posted: 05 Nov, 2018 11:34 am
  • அ+ அ-

கா.சு.வேலாயுதன்

“அக்பர்''
``சொல்லுங்க ஜி..!”
“இந்த தீபாவளிக்குப் பொண்ணு ஊருக்கு வருமா?”
“அப்புறம் வராம... அவ இல்லாம தீபாவளியா?”
“அப்ப இந்த வருஷமும் உங்க வீட்ல தீபாவளி களைகட்டும்?”

- இது எனக்கும் எழுத்தாளர் அக்பருக்கும் போனவாரம் நடந்த உரையாடல். என்னடா... அக்பர்ன்றான் தீபாவளின்றான்னு உங்களுக்கெல்லாம் ஒரே குழப்பமா இருக்குல்ல... மூளையைப் போட்டு ரொம்பக் கசக்கிக்காம மேற்கொண்டும் படிங்க.

பொள்ளாச்சியைச் சேர்ந்த இந்த அக்பர் ஒரு இஸ்லா மியர். இவரது மனைவி பிரேமா இந்து. இவர்கள் இருவரும் காதலித்துக் கரம்பிடித்து 25 ஆண்டுகள் ஓடி விட்டன. அக்பர் எழுத்தாளர். தனது பெயரின் முதல் எழுத்தையும் தனது மனைவியின் பெயரின் முதல் எழுத்தையும் கொண்டு, ‘பொள்ளாச்சி அபி’ என்ற பெயரில் பத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதுபவர். ‘ஆதலினால் காதலித்தேன்!’ என்ற நாவலுக்கும் ‘எங்கேயும், எப்போதும்!’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கும் சொந்தக்காரர். மனைவி பிரேமா பள்ளி ஆசிரியை.

இவர்களுக்கு ஷாந்தினி, ஷாலினி என இரண்டு பெண் பிள்ளைகள். காதலித்துத் திருமணம் செய்தாலும் அக்பரும் பிரேமாவும் ஒருவர் மற்றவரது உணர்வுக்கு மதிப்பளித்து வாழ்கிறார்கள். அதனால்தான் இவர்கள் வீட்டில் தீபாவளியும் ராம்ஜானும் களைகட்டுகிறது.

“பெரும்பாலும் ஒரு இந்துவும் முஸ்லிமும் காதலித்தால் மதம் மாத்தித்தான் கல்யாணம் செஞ்சுக்கிறாங்க. பிரேமாவையும் பாத்திமாவா மாத்துன்னு எனக்கும் சொன்னாங்க. ஆனா, அப்படி மாத்துறதால என்ன ஆகப்போகுதுன்னு நினைச்சுப் பார்த்தேன்; மறுத்துட்டேன். எங்க கல்யாணத்துக்கு ரெண்டு பேர் வீட்லயும் சம்மதிக்கல. பிரேமா வீட்ல, ‘நீ எங்க பொண்ணே இல்லை’ன்னுட்டாங்க. எங்க வீட்டுல, அப்பாவும் தம்பிகளும் சம்மதிச்சாலும் அம்மா முடியாதுன்னுட்டாங்க. அதனால நண்பர்கள் புடைசூழ பதிவுத் திருமணம் முடிச்சேன்.

‘என்னப்பா உம் பேரு அக்பருங்கறே... பொண்ணு எங்க பொண்ணா இருக்கு. ஒழுங்கா வச்சுக்குவியா. இடையில உட்டுட்டு போயிட்டீன்னா யாரு பொறுப்பு? முதல்ல நில்லு. நான் ஒரு போட்டோ எடுத்து வச்சிக்கிறேன்’னு சொன்ன பதிவாளர், ‘இந்தப் பொண்ணு கழுத்துல நீ தாலி கட்டியே தீரணும்’னு பிடிவாதமா சொல்லிட்டார். நானும் தாலி கட்டினேன்.

பெரியவ பிறந்த பின்னாடிதான் ரெண்டு குடும்பமும் ஒண்ணு சேர்ந்துச்சு. முதல் பெண்ணுக்கு ஷாந்தினின்னு வைக்கலாம்ன்னு என் மனைவி தான் சொன்னாங்க. சாந்து என்றால் நிலான்னு அர்த்தம். தவிர, அந்தப் பெயருல என்ன மதம் இருக்குன்னு ரெண்டு குடும்பத்துக்குமே தெரி யலை. அதனால ஒருத்தரும் ஒண்ணும் பேசல. ரெண்டாவது பொண்ணுக்கு ஷாலினின்னு வச்சோம். அது இந்துப் பெயரா, இஸ்லாமியப் பெயரான்னு யாருக்கும் புரிபடலை.

ஆனா, பொண்ணுக பெரிய பொண்ணு ஆனப்பதான் வேடிக்கையெல்லாம் நடந்தது. முதல் பொண்ணுக்கு என் வீட்டு சைடுல பர்தா, புர்கா போர்த்திட்டு தட்டு வச்சு சீர் செஞ்சாங்க. பிரேமா வீட்டு சைடுல அவங்க முறைப்படி, தட்டு வச்சு பூ, பொட்டு, சந்தனம் எல்லாம் வச்சாங்க. சின்னப் பொண்ணுக்கும் அப்படி ரெண்டு வீட்டு சைடும் ரெண்டு விதமா சீர் செய்யுறத பார்த்துட்டு, பக்கத்து வீட்டுல குடியிருந்த கிறிஸ்தவ பெண் ஒருவர், அவங்க முறைப்படி சிலுவை போட்டு ‘கர்த்தர் ஆசீர்வதிப்பாராக’ என மந்திரம் சொல்லி வாழ்த்திட்டுப் போய்ட்டார்” என நகைச்சுவையாகச் சொல்லிச் சிரித்த அக்பர், அடுத்ததாகத் தங்கள் வீட்டுத் தீபாவளிக்கு வந்தார்.

“தலைத் தீபாவளிக்கு பெரிசா ஒண்ணும் இல்லை. புதுத்துணி எடுத்தோம். நல்லா சமைச்சு சாப்பிட்டோம். பக்கத்து வீடுகளுக்கும் பலகாரம் கொடுத்தோம்; அவங்களும் கொண்டு வந்தாங்க. அப்பவே நாங்க தீபாவளியைப் பெரிசா எடுத்துக்கலை. எல்லா மக்களும் மகிழ்ச்சியா இருக்காங்க. அவங்களோட நம்மளும் மகிழ்ச்சியா இருக்கணும்ன்னு முடிவு செஞ்சு மத்தவங்க மாதிரியே தீபாவளி கொண்டாட ஆரம்பிச்சோம். பொண்ணுக பிறந்த பிறகு எங்க வீட்லதான் மத்தாப்பூ வெளிச்சம் அதிகமா இருக்கும். அவங்களும் ஆர்வமா தீபாவளியை வருஷா வருஷம் கொண்டாடினாங்க. கோயிலுக்கும் போவாங்க. ஒரு கட்டத்துல, ‘பட்டாசெல்லாம் வேண்டாம்பா. அது சூழல்கேடு’ன்னு எனக்கு கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. கடந்த எட்டு வருசமா புதுத்துணி, பலகாரம், விருந்தோட எங்க தீபாவளி முடிஞ்சுருது”என்று சொல்லும் அக்பர் பள்ளிவாசலுக்குப் போய் 42 வருடமாயிற்றாம்.
“கோயிலுக்குப் போறது என்னோட இஷ்டம். அதை இவர் தடுக்கமாட்டார்” என்று சொல்லும் பிரேமா, “தலைத் தீபாவளிக்கு ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கூப்பிட்டிருந்தாங்க. அவங்க வீடுகளுக்கும் போனோம். தலைப் பொங்கலுக்கு மதுரை ஃப்ரெண்ட் ஒருத்தர் கூப்பிட்டிருந்தார். அங்கே போய் பொங்கல் கொண்டாடி ஜல்லிக்கட்டு பார்த்தோம். அடுத்தடுத்த வருசங்கள்ல நாங்களே எங்க வீட்லயே தீபாவளியை செம்மையா கொண்டாட ஆரம்பிச்சுட்டோம். அக்கம் பக்கத்துல கொண்டாடுறப்ப நம்ம புள்ளைகளும் சந்தோஷமாக இருக்கணும் இல்லீங்களா. அதுக்காக கொண்டாடறதுதான். இதுல மதமெல்லாம் பார்க்கிறதில்லை” என்கிறார்.

“அதெல்லாம் சரி, பக்ரீத், ரம்ஜான், மொகரம் பண்டிகைகளை எல்லாம் இதே மாதிரி கொண்டாடுவீங்களா தலைவா?” என்று கேட்டால், “ம்ம்... அதுக்கும் எந்தக் குறைச்சலுமில்லை. எப்படியும் அம்மா வீட்டுக்குப் போயிடுவோம். அங்கே நாலா பக்கமும் பிரியாணி, பலகாரங்கள் அமர்க்களப்படும். ஒரு பிடி பிடிச்சுட்டுத்தான் வருவோம்!” என்று முடிக்கிறார் அக்பர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close