[X] Close

தாயம்மா முறுக்கு! - களைகட்டும் பலகார ஃபேக்டரிகள்


thayamma-murukku

  • kamadenu
  • Posted: 05 Nov, 2018 11:32 am
  • அ+ அ-

பாரதி.என்

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதித்த நீதிமன்றம், நல்லவேளையாக பலகாரம் சாப்பிட நேரம் நிர்ணயிக்கவில்லை. புத்தாடை, பட்டாசு வாங்குதல் எனத் தீபாவளி பர்சேஸ் முழுவீச்சில் சூடு பிடித்துள்ளது. பெரிய பெரிய ஸ்வீட் கடைகளிலும் தீபாவளி பலகாரங்கள் வாங்க கூட்டம் குவிந்து கொண்டிருக்க, தீபாவளி விற்பனைக்காக பலகாரம் போடும் குடும்பங்களும் பயங்கர பிஸி!

பேக்கரிகளில் புதிது புதிதாக கேக் வகைகளும், இனிப்பு, காரங்களும் அறிமுகமாகிவிட்டாலும் பாரம்பரியமான கைச்சுற்று முறுக்குக்கு அவைகள் ஈடாகுமா? இப்போதும் தீபாவளி நேரங்களில் தாயம்மா ஆச்சியின் தரிசனம் கிடைக்க காத்திருக்கத்தான் வேண்டும். நாகர்கோவில் கோட்டாறு குறுந்தெருவில் குட்டிச்சந்தில் இருக்கிறது தாயம்மாவின் வீடு. அந்த வீட்டுக்குள் மூன்று பெண்கள் கைச்சுற்று முறுக்குக்கு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பெண் அதை அடுப்பில் போட்டு எடுக்கிறார். தீபாவளி ஆர்டர்களுக்காக இடைவேளையே இல்லாமல் பணிகள் நடந்து கொண்டிருந்தன. வெளியூரில் வசிக்கும் இப்பகுதி இளசுகள், “தாயம்மாச்சி முறுக்கு வாங்கி அனுப்பும்மா” என வேண்டுகோள் விடுக்கும் அளவுக்கு இந்த 67 வயது ஆச்சியின் கைமுறுக்கு ஃபேமஸ்!

 “எங்கம்மை பகவதியம்மை காலத்துலயே முறுக்கு போடதுதான் தொழிலு. இது அரிசி மாவுல போடுக கை சுத்து முறுக்கு. நான் இந்தத் தொழிலுக்கு வந்து முழுசா அம்பது வருசம் ஆச்சு. முறுக்கு மட்டும் இல்லை, இதே மாதிரி அதிரசம், தட்டுவடை, முந்திரி கொத்து, சீடை எல்லாம் போடுவோம். இதையெல்லாம் சீமந்த (வளைகாப்பு) பலகாரம்ன்னு சொல்லுவோம்.

முன்னாடியெல்லாம் தீபாவளிக்குன்னு பிரத்யேக தயாரிப்பு எதுவும் இருக்காது. வழக்கமா கடைகளில் ஆர்டருக்கு செய்யது கணக்காதான் தீபாவளி காலத்திலும் செய்வோம். ஆனா இப்போ, வீடுகளில் பெரும்பாலும் யாரும் பலகாரம் செய்யது இல்லை. அதுக்கு அவங்களுக்கு நேரமும் இல்ல. புருசன், பொஞ்சாதி இரண்டு பேரும் வேலைக்குப் போற குடும்பங்க பெருகிப் போச்சு. சின்னப் பிள்ளைங்களை வீட்டுல வச்சுருக்கவுங்களும் பலகாரம் போட நேரத்தை ஒதுக்க முடியாது. அந்த மாதிரி ஆளுகெல்லாம் இப்போ மொத்தமா ஆர்டர் கொடுத்துடுறாங்க. தீபாவளிக்கு முந்துன நாள் வரைக்கும் நாங்க பிஸிதான் தம்பி!” என்று சொல்லிச் சிரிக்கிறார் தாயம்மா ஆச்சி.

தாயம்மாவின் முறுக்கு ருசி அறிந்தவர்கள் மீண்டும் மீண்டும் தேடி வருகிறார்கள். அமெரிக்கா, லண்டன் என வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் பிள்ளைகளுக்காகவும் இங்கு வந்து பார்சல் வாங்கி அனுப்புகின்றனர் சுற்றுவட்டாரத்தினர். தீபாவளி பலகாரத்தைப் பொறுத்தவரை முறுக்கில் 4 சுற்று தான். சிலர் ஏழு சுற்று வரை சொல்லி வைத்து வாங்கிச் செல்கின்றனர்.

இதேபோல் கோட்டாறு செட்டியத்தெருவுக்குள் நுழைந்தாலே எண்ணெய் சட்டியில் நீச்சலடித்துக் கொண்டிருக்கும் பலகாரங்களின் வாசனை மூக்கைத் துளைக்கிறது. தனது டு வீலரில் பலகாரங்களை டோர் டெலிவரி செய்கிறார் சுப்பிரமணியம். அவர் வீட்டுக்குள் சென்றால் அவரது அம்மா மல்லிகா, அப்பா கணேசன், சுப்பிரமணியத்தின் மனைவி கற்பகம் என சகட்டுமேனிக்கு அத்தனை பேரும் பலகாரம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். குடிசைத்தொழிலாக பலகாரம் போடும் இவர்கள், அரிசி முறுக்கு, அச்சு முறுக்கு, தேன்குழல் முறுக்கு என முறுக்கிலேயே வகை வகையாய் போடுகிறார்கள்.

முறுக்கு மாவை முறுக்குக் கட்டைக்குள் திணித்துக்கொண்டே நம்மிடம் பேசிய சுப்பிரமணியம், “தீபாவளிதான் எங்க ஆபத்பாந்தவன். தீபாவளி நேரத்துல இருபதாயிரம் ரூபாய்க்கு சாமான் வாங்கி வேலை செய்வோம். அதுல வர்ற வருமானம்தான் எங்க தீபாவளி கொண்டாட்டத்தையே தீர்மானிக்கும். மற்ற நேரங்களில் பேக்கரி, சின்னச் சின்ன பலகாரக் கடைகளுக்கு சப்ளை செய்வோம். அது வரவுக்கும், செலவுக்குமே சரியா இருக்கும். தீபாவளி நேரம் பலதரப்பிலும் இருந்தும் வீட்டுக்குத் தேடிவந்து வாங்க வருவாங்க. தீபாவளிக்கு பத்து நாள் முன்னாடியே போட ஆரம்பிச்சா, தீபாவளிக்கு தலக்காணத்து (முந்தையநாள்) வரை வேலை இருக்கும்” என்றார்.

கோட்டாறில் 25 ஆண்டுகளாக வீட்டிலேயே பலகாரங்கள் செய்து கடைகளுக்கு சப்ளை செய்யும் முருகன்_லெட்சுமி தம்பதி வீட்டிலும் தீபாவளி விற்பனை ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது. லட்டு பிடித்துக்கொண்டே என்னிடம் பேசிய அந்தத் தம்பதி, “தேன்குழல் முறுக்கு, ஏத்தன்காய் சிப்ஸ், ஆந்திரா முறுக்குன்னு கார வகைகளும், பர்பி, பாதுஷா, லட்டு, பூந்தின்னு இனிப்பு வகைகளும் போடுவோம். எங்களுக்கு ரெகுலர் கஸ்டமர் அதிகம். தொலைதூரத்துலருந்தெல்லாம் தேடி வந்து வாங்கிட்டுப் போவாங்க. தீபாவளிக்கு எங்ககிட்ட இனிப்பு வாங்க நிறைய பேரு வருவாங்க. அதுதான் தீபாவளி தயாரிப்பு இப்போ களைகட்டியிருக்கு”என்றார்கள்.

தென் கோடியில் மட்டுமல்ல... தமிழகத்தின் பல பகுதிகளிலும் இப்போது இந்தப் பலகார ஃபேக்டரிகள் வளர்ந்து வருகின்றன. செட்டிநாட்டுப் பகுதியில் ஆச்சிமார்களே பலகாரத் தொழிலில் ஜமாய்க்கிறார்கள். டிவி-யில் விளம்பரம் செய்து, ஏற்றுமதி லைசென்ஸ் பெற்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யுமளவுக்கு இவர்களின் பலகார தொழில் இப்போது பிரபலமாகிவிட்டது!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close