[X] Close

தெய்வக் குழந்தைகளின் தெய்வீகத் தீபாவளி!


homeless-children-diwali

  • kamadenu
  • Posted: 05 Nov, 2018 11:31 am
  • அ+ அ-

கே.கே.மகேஷ்

தீபாவளி நாளின் இரவு வானம் போல, மாணவி மேகலாவின் முகத்தில் அத்தனை வண்ணங்கள். கண், கன்னம், இதழ்கள் எல்லாம் விரிய, நெற்றிப்புருவமும்கூட சிரித்தது. காதுகள் கூட விடைத்துக்கொண்டது போல தோன்றியது. ஒட்டுமொத்த தீபாவளியின் சந்தோஷத்தையும் அந்தப் பார்வையற்ற மாற்றுத்திறனாளியின் முகத்தைப் பார்த்தே தெரிந்துகொள்ளலாம் போல.

பண்டிகைகள் என்றாலே குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்தான். அதுவும் தீபாவளிக்கு மட்டுமே புதுசு உடுத்தும் குழந்தைகளின் சந்தோஷத்தைக் கேட்கவும் வேண்டுமா? அப்படியான குழந்தைகளின் மகிழ்ச்சியை எழுத்தில் பதிவு செய்வது இயலாத காரியம் என்றாலும், முயன்றுதான் பார்ப்போமே என்று களமிறங்கியபோதுதான் மேகலாவைச் சந்தித்தேன்.

மதுரை பைக்காராவில் உள்ள பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்கான ‘தூய்மை விழிகள்' இல்லத்தில் தங்கியிருக்கும் மேகலாவிடம், “உங்க தீபாவளி சந்தோஷத்தை அப்படியே வார்த்தையில் சொல்லலாமா?” என்று கேட்டேன்.

“தீபாவளி சமயத்துல எங்கள மாதிரி புள்ளைங்க எல்லாம் ரோட்டுல ரொம்ப பயந்து பயந்து நடந்து போவோம் சார். திடீர்னு பக்கத்துல வெடிச்சத்தம் கேட்கும். அரண்டு போய் அந்த ஒரு நிமிஷம் அப்படியே நின்றுவோம். காலுக்கடியில வெடிச்சிருமோன்னு பயந்துக்கிட்டேதான் நடப்போம். போன வருஷம், எங்க இல்லத்துலேயே தீபாவளி கொண்டாட்டம் நடந்துச்சி. அந்த அனுபவம் வேற மாதிரி இருந்துச்சி. காதுகளைத் தீட்டி வெச்சிக்கிட்டு ரொம்ப கவனமா கேட்போம். வெடிக்கிற வெடிகளைவிட, ஃபேன்ஸி வெடிகளைத்தான் அதிகமா போடுவோம். ஆனாலும், ஒவ்வொரு வெடிக்கும் ஒரு சத்தம், ஒரு மணம். கம்பி மத்தாப்பு கொளுத்துற படபட சத்தமும், குச்சி மத்தாப்பு கொளுத்துற சர்சர்சர்... சத்தமும் கூட சந்தோஷப்படுத்தும். 

தரைச்சக்கரத்துல வர்ற சத்தமே அது எவ்வளவு வேகமா சுத்துதுன்னு சொல்லிடும். புஸ்வாணம் போட்டா, தகரக் கொட்டகையில சோன்னு மழை பெஞ்ச மாதிரி ஒரு சத்தம் வருமே, செமையா இருக்கும். சில வெடிகள் விசில் சத்தம் போட்டுக்கிட்டே விலகிப்போற மாதிரி இருக்கும். கடைசியா 64 ஷாட் வெடி வெப்பாங்க. மத்தவங்க எல்லாம் வானத்தைப் பார்த்து வண்ணங்களை ரசிப்பாங்க. நான் ஒண்ணு, ரெண்டுன்னு வெடிச்சத்தத்தை எண்ணுவேன். ‘என்ன சார்... 64 ஷாட்டுன்னு சொன்னீங்க, 59 தான் வெடிச்சுது’ன்னு கேட்பேன். அப்படியே, 1000 வாலா சரவெடில எத்தனை வெடிக்கலைன்னு எண்ண முயற்சி  செய்வேன். ஆனா, முடியாது” என்று மத்தாப்பாய் சிரித்தார் மேகலா.

“பொதுவா பார்வையற்ற குழந்தைகள யாரும் வெடிபோட அனுமதிக்க மாட்டாங்க. ஆனா, இந்த இல்லத்தை நடத்துற வேல்முருகன் சாரே பார்வையற்றவர்ங்கிறதால எங்களோட உணர்வுகளைப் புரிஞ்சுக்கிட்டு அனுமதிப்பார். எங்களால திரி மேல கரெக்ட்டா தீ வைக்க முடியாது. அதுக்கெல்லாம் உதவுறதுக்கு தன்னார்வலர்கள் வருவாங்க. இருந்தாலும், வெடி மேல பேப்பரைச் சுத்தி, அந்தப் பேப்பரை நானே கொளுத்திவிட்டுட்டு ஓடிவந்திடுவேன். வெடிச்சதும், ‘ஐ நான் தனியா வெடி போட்டுட்டேன்’னு ஒரு சந்தோஷம் வரும் பாருங்க. அதை எப்படிச் சொல்றதுன்னே தெரியல” என்றார் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர் சுரேஷ்.

சிரஞ்சீவி என்ற மாணவன் பேசும், கேட்கும் திறனற்ற மாற்றுத்திறனாளி. ஆனால், வெடிகளின் வண்ணத்தை ரசிப்பவர். அந்தச் சந்தோஷத்தை முகமெல்லாம் பூரிப்போடு சைகையிலேயே சொன்னது ஒரு அழகிய காணொளியாகவே என் மனதில் பதிந்துவிட்டது.

“எங்க ஸ்கூல்ல எல்லாக் குழந்தைங்களும் தீபாவளி லீவு முடிஞ்சி வர்றப்ப புது டிரஸ் போட்டுக்கிட்டு வருவாங்க. சில பிள்ளைங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது. போன வருஷம் நானும் புது டிரஸ் போட்டுக்கிட்டுப் போனேன். யாரோ செஞ்ச உதவியால எங்க இல்லத்துல இருக்கிற பிள்ளைங்களுக்கெல்லாம் அவ்வளவு சந்தோஷம்” என்று சொல்லும்போதே நா தழுதழுக்கிறது கல்லூரி மாணவி அழகேஸ்வரிக்கு. சமயநல்லூரில் உள்ள ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான சக்தி டிரஸ்ட் இல்லத்தில் இருக்கும் இவர் தொடர்ந்து பேசுகையில், “தீபாவளியன்னைக்கு நல்லா சாப்பிடுவோம். ஜாலியா விளையாடுவோம். வெடி போடுவோம். ஆனா, காலையில நமக்கு எண்ணெய் தேய்ச்சிவிட அம்மா, பாட்டியெல்லாம் இல்லியேன்னு நினைக்கும்போது சின்னதாக கவலை எட்டிப்பார்க்கும். அப்புறம், சின்னக்குழந்தைகளுக்கும் அந்த ஏக்கம் இருக்கும்லன்னு நானே குட்டீஸ்க்கு எண்ணெய் தேய்ச்சி குளிப்பாட்ட ஆரம்பிச்சிடுவேன். போன வருஷம் ஒண்ணாப்பு படிச்ச கார்த்திகா லட்சுமி, ராமலட்சுமி, ஜமுனாதேவி மூணு பேரையும் குளிப்பாட்டி, டிரஸ் பண்ணிவிட்டு, மேக்கப் போட்டுவிட்டது நான்தான். அதுல இருந்து அந்தப் பிள்ளைங்க சொந்த அக்கா மாதிரி என்கிட்ட ஒட்டிக்கிச்சுங்க. சும்மா நடிப்பில்லை, பாசத்திலேயே கொன்னுடுவாங்க அந்தக் குட்டீஸ். கிழவியான பெறகும் இந்தப் பந்தம் தொடரும்னு தோணுது” என்கிறார்.

மதுரை ஆரப்பாளையம் பிள்ளைமார் தெருவில், மூளை மற்றும் மனவளர்ச்சி குன்றிய, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியை நடத்துகிறது ‘ஜெகே மாஸ் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பு. அங்கிருக்கும் குழந்தைகளில் 90% பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள். இங்கே சிறப்பாசியர்களைத் தவிர குழந்தை பராமரிப்பாளர்களாக இருப்பவர்கள் அனைவருமே அந்தந்த குழந்தைகளின் பெற்றோர்கள்தான். “இந்தப் பிள்ளைங்களுக்கு ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஆள் தேவை. அதனால நாங்கெல்லாம் தீபாவளியன்றுகூட பிள்ளை பக்கத்திலேயே இருப்போம். வேற யாராச்சும் வெடி வெடிச்சாக்கூட இவங்க பயந்துடுவாங்களோன்னு வீட்ல யாருமே பட்டாசு போடுறதில்லை. போன வருஷம், ‘படிக்கட்டுகள்’ என்ற இளைஞர்கள் அமைப்பு இங்க வந்து இந்தக் குழந்தைகளோடு தீபாவளி கொண்டாடுனாங்க. எல்லாத்துக்கும் ஒரே சந்தோஷம்” என்கிறார் மாற்றுத்திறனாளி குழந்தை இசக்கி லாவண்யாவின் தாய் சண்முகப்ரியா.

இந்தக் குழந்தைகளுக்கு உதவி செய்தவர்கள் எப்படி உணர்கிறார்கள்? என்று அறிய புரவலர்கள் சிலரிடம் பேசினேன். பெரும்பாலானவர்கள் வலது கை கொடுப்பதை இடது கைக்குத் தெரியாமல் உதவுபவர்கள் என்பதால், பேச மறுத்தனர். பெயரைக் குறிப்பிட மாட்டோம் என்ற பிறகு பேசினார் ஒருவர்.

“மதுரை யானைமலை புதுப்பட்டி கிராமத்தில், தமிழக அரசின் தொழுநோயாளிகள் இல்லம் இருக்கு. அங்கே ஒரு பத்துக் குழந்தைகள் இருக்காங்க. அவங்க எந்த நோய் பாதிப்பும் இல்லாத இயல்பான குழந்தைங்கதான். ஆனா, பெற்றோருக்கு பாதிப்பு இருப்பதால் அவர்களும் அங்கேயே தங்கியிருக்க வேண்டிய நிலை. அரசின் உதவித்தொகையால் உணவுத்தேவையை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் என்பதால், யாரோ கொடுத்த பழைய ஆடைகளைத்தான் அந்தக் குழந்தைங்க உடுத்திருப்பாங்க. அவங்க வெச்சிருக்கிற புத்தாடை என்றால், அரசாங்கம் கொடுக்கிற பள்ளிச்சீருடை மட்டுமே. போன தீபாவளிக்கு அவங்களுக்கு புதுச்சட்டை எடுத்துக்கொடுத்தேன். இன்னமும் அதைப் பத்திரமா வெச்சிருக்காங்க. இந்த முறை போனப்ப, அதைப் போட்டுட்டு வந்து காட்டி, ‘சார், நீங்க போன தீவாளிக்கு கொடுத்தது. இன்னும் கிழியல’ என்றார்கள். அப்டியே நெகிழ்ந்து போய்ட்டேன். இனி, எல்லா தீபாவளிக்கும் அவங்களுக்கு நான் புத்தாடை தருவேன்” என்றார்.

“தீபாவளியன்னிக்கு நான்கைந்து சின்னக் குழந்தைகளுக்கான டிரெஸ்களை வாங்கிட்டுத்தான் கோயிலுக்குப் போவேன். கோயிலுக்குப் பக்கத்துல அழுக்குச் சட்டையோட சில குழந்தைகள் கையேந்துவாங்க. அவங்கட்ட அந்த டிரெஸ்கள குடுத்துட்டு கோயிலுக்குள்ள போனா மனசுக்கு அம்புட்டுத் திருப்தியா இருக்கும். திரும்பி வெளியே வர்றப்ப, புது டிரெஸ்ஸ போட்டுக்கிட்டு நம்ம முன்னால வெட்கத்தோட வந்து நின்னு, ‘ நல்லாருக்கா’ என்பது மாதிரி பார்ப்பார்கள். அந்தத் தெய்வத்தையே கோயில் வாசலில் பார்த்த மாதிரி சந்தோஷமா இருக்கும். அந்த ஃபீலிங்கை எல்லாம் வார்த்தையில சொல்ல முடியாது. அனுபவிச்சாத்தான் தெரியும்” என்றார் இன்னொரு கொடையாளர்.

அந்தக் குழந்தைகளிடமிருந்து நான் விடைபெறுகையில், சிறுவயது தீபாவளி அனுபவங்களை உற்சாகமாகவும் உணர்வுபூர்வமாகவும் பதிவு செய்திருந்த ஒரு வாட்ஸ் - அப் தகவலை அனுப்பியிருந்த நண்பர், “நாம் அறியாமல் விடைபெற்ற அந்தத் தீபாவளியை எங்கேயாவது பார்த்தால் அனுப்பி வையுங்களேன்” என்று கேட்டிருந்தார். அவருக்கு இந்த அனுபவங்களை எல்லாம் சொல்லி, “அந்தத் தீபாவளி ஏழைக் குழந்தைகளிடம் பத்திரமாக இருக்கிறது” என்று சொல்ல வேண்டும் போல் தோன்றியது!

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close