[X] Close

இவங்களுக்கு ரெண்டு தீபாவளி!


two-diwali-village

  • kamadenu
  • Posted: 05 Nov, 2018 11:26 am
  • அ+ அ-

கா.சு.வேலாயுதன்

ஒரு தீபாவளியைக் கொண்டாடி கடப்பதற்கே நாக்குத் தள்ளிப் போகிறது. ஆனால், பொள்ளாச்சி அருகே உள்ள வடசித்தூர் கிராமத்தில் இரண்டு தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்! அந்த இரண்டாவது தீபாவளிக்குப் பெயர் ‘மயிலந்தீபாவளி.’

அதென்ன மயிலந்தீபாவளி? “வாரத்தில் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் மாட்டுச் சந்தை கூடும் ஒரே ஊர் பொள்ளாச்சி. வியாழக்கிழமை கூடும் சந்தையில் பசு, காளை, எருமை, ஆடு என சகல கால்நடைகளும் இடம் பிடித்திருக்கும். அதற்கு அடுத்தநாள் கூடும் சந்தையில் வண்டிகளுக்கு பூட்டும் மயிலைக் காளைகள் மட்டுமே இருக்கும். அதனால் அந்த சந்தைக்கு மயிலஞ்சந்தை என்று பெயர். இரண்டாவது நாள் சந்தைக்கு மயிலஞ்சந்தை என்று பெயர் வைத்திருப்பதால், தீபாவளிக்கு மறுநாள் கொண்டாடப்படும் தீபாவளிக்கு மயிலந்தீபாவளி என்று பெயர் வைத்துவிட்டார்கள்” என்கிறார் வடசித்தூர் நண்பர் குழுவைச் சேர்ந்த பொன் இளங்கோ.

வடசித்தூரில் வசிப்போரில் 25 சதவீதம் பேர் முஸ்லிம்கள். இங்குள்ள இந்துக்களில் கொங்குவேளாளக்கவுண்டர்களே அதிகம். அதிலும் செம்மங்குலம் உட்பிரிவினரே மிகுதி. இந்த செம்மங்குலத்தவர்கள் செவ்வாய்க் கிழமைகளிலும், அமாவாசை தினத்தன்றும் அசைவம் சாப்பிட மாட்டார்கள். ஆனால், இவர்கள் வீடுகளில் தீபாவளிக்காகக் கறிவிருந்து அமர்க்களப்படும். பெரும்பாலும் தீபாவளி அமாவாசை அன்றுதான் வரும். அதனால் கறிவிருந்துக்காகவே தீபாவளிக்கு அடுத்த நாள் மயிலந்தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். மறுநாள் செவ்வாய்கிழமையாக இருந்தால் மயிலந்தீபாவளி மூன்றாம் நாளுக்குப் போய்விடும். அந்த வருடத்தில் மூன்று நாள்களுக்கு தீபாவளி கொண்டாட்டங்கள் நீடிக்கும்.
வெறுமனே கறி விருந்து மட்டுமல்ல... வாண வேடிக்கை, கோலாட்டம், கும்மியாட்டம் என கிராமியத் திருவிழாக்களும் மயிலந்தீபாவளியின் போது அமர்க்களப்படும். இந்த ஆண்டு மயிலந்தீபாவளிக்கு வடசித்தூர் தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில் அந்தக் கிராமத்து மக்கள் சிலரை சந்தித்துப் பேசினேன்.

 “எனக்கு நினைவு தெரிஞ்ச நாளா ரெண்டு தீபாவளிய கொண்டாடிட்டு இருக்கேன். தீபாவளியன்னைக்கு ஊட்ல நாலுபேர்தான் இருப்போம். அதுவே மயிலந்தீபாவளி அன்னெய்க்கு மக்க, மருமக்க, பேரன் பேத்தி, மாமன், மச்சினனுகன்னு எல்லாரும் வந்து ஊரே நிறைஞ்சிருக்கும். மயிலந்தீபாவளிக்கு எங்க ஊட்டு பெரிசுக எனக்கு வேற கதைய சொல்லியிருக்காங்க. அந்தக் காலத்துல தீபாவளி அன்னெய்க்கு பண்ணை ஆளுக வேலைக்கு வர மாட்டாங்க. அதனால ஊட்டுல இருக்கிற எளந்தாரிப் பசங்க தோட்டங்காட்டு காவலுக்குப் போயிருவாங்க. அடுத்தநாள் அந்த மைனர்களுக்குன்னே இந்தத் தீபாவளியைக் கொண்டாடினதால மைனர் தீபாவளின்னு ஆச்சாம்”என்றார் ராஜதுரை.

தொடர்ந்து பேசிய சின்னதுரை, “கோயில் திருவிழா போல ஊருக்குள்ளே ராட்டாந்தூரி, கோலாட்டம், மயிலாட்டம், கும்மியாட்டம் எல்லாம் நடக்கிறதால, அதுக்கு மைனர்களே நிறைய கூடிருக்காங்க. அதனாலதான் மயிலந்தீபாவளி மைனர் தீபாவளின்னு ஆச்சே ஒழிய வேறொன்றுமில்லை” என்றார்.

வெட்டுக்காட்டு மயில்சாமி கவுண்டர், “எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து மயிலந்தீபாவளிக்கு எங்க ஊட்ல 50 பேருக்கு குறையாம சொந்தபந்தங்க சேர்ந்துடும். ரெண்டு சேவக்கோழி, ஒண்ணு ரெண்டு வெடக்கோழி, அது போக கிடாகறின்னு அந்த நாள்ல மொடாமொடாவா கறிதான் வேகும். இந்த வருஷமும் அதுக்கு குறைவிருக்காது” என்றார்.

 “எங்க ஊரைச் சுத்தியும் இருக்கிற பதினெட்டுப்பட்டி ஜனமும் மயிலந்தீபாவளி அன்னெய்க்கு எங்க ஊருக்குள்ளதான் இருக்கும். இதுல முஸ்லிம், கிறிஸ்டியன்னு பாகுபாடெல்லாம் கிடையாது. எங்க வீட்டுலயும் கறிவேகும். அவங்க வீட்டுலயும் வறுவல் மணக்கும். எங்கே போனாலும் யார் வேணும்னாலும் சாப்பிட்டுக்கலாம். அசலூர்காரங்க யார் வந்தாலும் ஏதாச்சும் ஒரு வீட்ல கறிசோறு சாப்பிடாம இங்கிருந்து தப்பிக்க முடியாது” என்றார் சுல்தான் காதர்.

அபிராமி என்பவர் பேசும்போது, “நான் பொறந்த ஊர் ஆழியாறு பக்கம். கட்டிக் கொடுத்ததுதான் வடசித்தூர். எங்க ஊர்ல இருக்கிற வரைக்கும் மயிலந்தீபாவளின்னா என்னன்னு தெரியாது. தலை தீபாவளிக்கு பொறந்த ஊருக்குப் போய் தீபாவளி கொண்டாடினேன். அடுத்தநாளே இங்கே வந்து மயிலந்தீபாவளி கொண்டாடினேன். அதுக்கப்புறம் வருஷந்தப்பினாலும் தவறும்; ரெண்டு தீபாவளி கொண்டாடறது தப்பாது. வெளியூர்களுக்கு வாக்கப்பட்டுப் போன எங்க ஊருப் பொண்ணுங்களும் மயிலந்தீபாவளிக்கு கட்டாயம் இங்க வந்துருவாங்க” என்றார்.

அவர் சொன்னதை அப்படியே ஆமோதித்த மகேஸ்வரி, விஜயகமலம், லட்சுமி ஆகியோர், “எங்களுக்கெல்லாம் தீபாவளியை விட மயிலந்தீபாவளிதான் பிடிக்கும். ஏன்னா, பிறந்த ஊரு, புகுந்த ஊருன்னு எல்லா இடத்திலும் அவங்கவங்க தீபாவளியைக் கொண்டாடிடுவாங்க. மத்த ஊருக்கு வரமுடியாது. அதிலும் ஓர் ஊரிலிருந்து கட்டிக் கொடுத்த பொண்ணுக, தலை தீபாவளிக்கு மட்டும்தான் பிறந்த ஊருக்கு வர முடியும். அப்புறம் புகுந்த வீட்லதான். இங்கே அந்த மரபு உடையுது. எங்கே கட்டிக் கொடுத்திருந்தாலும் அந்தப் பொம்பளைப் புள்ளை இந்த மயிலந்தீபாவளிக்குப் புறப்பட்டு இங்கே வர முடியுது. அதேபோல இங்கே கல்யாணமாகி வந்த பொண்ணுங்களும் எல்லா வருஷமும் அவங்க அப்பா, அம்மா, கூடப் பொறந்தவங்கன்னு எல்லாரையும் கூப்பிட்டு மயிலந்தீபாவளிக்குக் கறி விருந்து போட முடியுது. இப்படியெல்லாம் சொந்தபந்தங்களைக் கூட்டி தீபாவளியைக் கொண்டாட முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்கள்.

ஊருக்குள் மயிலந்தீபாவளி கொண்டாட்டங்கள் பற்றி எல்லோரும் ஆர்வத்துடன் பேசுகிறார்கள். அந்த கிராமத்தை நான் ஒரு சுற்று வருவதற்குள், “இந்த வருஷம் நீங்களும் மயிலந்தீபாவளிக்குக் கட்டாயம் எங்க ஊருக்கு வரணும்” என்று சாதி மதங்கள் கடந்து அத்தனை பேரும் எனக்கு அழைப்பு விடுத்தார்கள். “ஆகட்டும் பார்க்கலாம்” என்று அன்பாகச் சொல்லிவிட்டு அவர்களிடமிருந்து விடைபெற்றேன்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close