கூடலூரில் கைதியை தாக்கிய 5 காவலர்கள் பணியிடை நீக்கம்


கூடலூர்: கூடலூர் கிளை சிறையில் கைதியை தாக்கிய 5 சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் கிளை சிறையில் நிஜாமுதீன் என்ற நபரை குற்ற வழக்கு ஒன்றில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கைதியாக அடைத்துள்ளனர். சிறை காவலில் இருந்த நிஜாமுதீனுக்கும் சிறை காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த 12ம் தேதி கூடலூர் கிளை சிறையில் உள்ள காவலர்கள் ‘சிறை காவலர்களான எங்களையே எதிர்த்து பேசுவியா’ என கூட்டாகச் சேர்ந்து இரும்பு கம்பியாலும், லத்தியாலும் நிஜாமுதீனை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

காவல்துறையினரின் இந்த கொடூரத் தாக்குதலில் நிஜாமுதீனின் கைகளில் முறிவு ஏற்பட்டிருக்கிறது. கடுமையான காயங்களுடன் சிறையில் நிஜாமுதீன் இருப்பதாக அவரின் உறவினர்கள், டிஜிபி மற்றும் மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் கூடலூர் மாஜிஸ்திரேட், வட்டாட்சியர் முத்துமாரி, உதவி காவல் கண்காணிப்பாளர் வசந்தகுமார் குழுவினர் கூடலூர் கிளை சிறையில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

கைதி நிஜாமுதீன் தாக்கப்பட்டதற்கு முகாந்திரம் உள்ளது என்பதை இக்குழுவினர் உறுதி செய்தனர். விசாரணைக்குழுவினர் சமர்ப்பித்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு கூடலூர் கிளை சிறைச்சாலையில் பணியாற்றிய உதவி ஜெயிலர் கங்காதரன், முதன்மை வார்டன் மலர்வண்ணன், கிரேட் 1 காவலர் சின்னசாமி, கிரேட் 2 காவலர்கள் தினேஷ்பாபு, அருண், கோபி ஆகிய 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

துறை ரீதியான நடவடிக்கையைத் தொடர்ந்து சட்டரீதியான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூடலூரில் சிறையில் உள்ள கைதியை தாக்கி காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் நீலகிரி மாவட்ட காவல்துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

x