பாபநாசம் கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்: 3 பேர் கைது


திருநெல்வேலி: பாபநாசத்தில் பாபநாசநாதர் கோயில் சித்திரை விசு திருவிழாவின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

பாபநாசம் பாபநாசநாதர் கோயிலில் சித்திரை விசு திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் சுவாமி- அம்பாள் பூம்பல்லக்கில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், தமிழ் புத்தாண்டையொட்டி ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

வி.கே.புரம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் (52) தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது 3 இளைஞர்கள் மதுபோதையில் வந்து தகராறில் ஈடுபட்டனர். அவர்களை மாரியப்பன் கண்டித்து, அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், சப்- இன்ஸ்பெக்டர் மாரியப்பனை தாக்கினர். சக போலீஸார் அந்த 3 இளைஞர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் வி.கே.புரம் டானாவை சேர்ந்த மைதீன், இலியாஸ், ரியாஸ் என்பது தெரியவந்தது. அவர்கள் மீது 4 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

x