ராஜபாளையம் அருகே பால் வியாபாரி மர்ம மரணம்: மனைவி, மகளிடம் விசாரணை


ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே எம்.பி.கே புதுப்பட்டியில் பால் வியாபாரி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், மனைவி மற்றும் மக்களிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ராஜபாளையம் அருகே எம்.பி.கே புதுப்பட்டியை சுப்பிரமணி(60). இவரது மனைவி ஈஸ்வரி(55). இவர்களது மகள்கள் ராஜலட்சுமி(32), தெய்வானை(30) இருவரும் திருமணமாகி குடும்பத்துடன் தனியாக வசித்து வருகின்றனர். சுப்பிரமணி பால் வியாபாரம் செய்து வந்தார்.

இளைய மகள் தெய்வானைக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததால், சுப்பிரமணி இருவரையும் எம்.பி.கே புதுப்பட்டியில் வீடு எடுத்து தங்க வைத்தார். இந்நிலையில் தெய்வானை தகராறு செய்ததால் அவரது கணவர் பிரிந்து சென்று விட்டார். இதனால் சுப்பிரமணி தனது மனைவி மற்றும் மகளை கண்டித்து வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை மாலை இப்பிரச்சினை குறித்து பேசியதால் சுப்பிரமணி, மனைவி ஈஸ்வரி, மகள் தெய்வானை இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் சுப்பிரமணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அவரது மனைவி, மகள் தெரிவித்துள்ளனர். சுப்பிரமணி உடலில் காயங்கள் இருந்ததால், போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து உயிரிழந்த சுப்பிரமணியின் மனைவி ஈஸ்வரி, மகள் தெய்வானை இடம் ராஜபாளையம் வடக்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

x