நெல்லை அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது


நெல்லை: திருநெல்வேலி அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் மாலையில் ஓர் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், திருநெல்வேலி அரசு பன்னோக்கு மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்துள்ளேன் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதையடுத்து மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணியின் உத்தரவின் பேரில் துணை ஆணையர் வினோத்சாந்தாராம் மேற்பார்வையில் ஹைகிரவுண்ட் போலீஸாரும், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாரும் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சோதனையிட்டனர்.

ஆனால் வெடிகுண்டு கண்டுபிடிக்கப் படவில்லை. மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்தது. இதையடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி எண் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். மிரட்டல் விடுத்தவர் உவரியை அடுத்த குஞ்சன்விளையை சேர்ந்த முத்து பெருமாள் (42) என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

முத்துப்பெருமாள் குடிப்பழக்கம் உடையவர். திருநெல்வேலி அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் சிகிச்சைக்கு வந்துள்ளார். அங்கு அவரை கூடவே இருந்து பார்த்துக்கொள்ள உதவியாளர் இல்லாததால் மருத்துவமனை யில் இருந்து திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்து மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

x