கரூர்: திருமாநிலையூர் முதல் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து மகன் சந்திர சேகர் (34). கூலித் தொழிலாளியான இவர், மாநகராட்சி 36-வது வார்டு ஜெயலலிதா பேரவை செயலாளராக இருந்தார். மனைவி சரண்யாவுடன் (30), ராயனூர் தில்லை நகரில் வசித்து வந்தார். இருவருக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம் மது போதையில் சந்திர சேகர் வீட்டுக்கு வந்தார். அப்போது, தம்பதி இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது, சிறிய மூங்கில் கட்டையை எடுத்து சந்திர சேகரின் தலையில் பின்புறம் சரண்யா அடித்துள்ளார். இதில், காயமடைந்த சந்திர சேகரை, கரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து, அவரது தாய் வீட்டில் விட்டு விட்டு சரண்யா வீடு திரும்பினார்.
இந்நிலையில், நேற்று காலை அசைவற்று கிடந்த சந்திர சேகரை அவரது தாய் மதி, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவர்கள் பரிசோதித்து அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து தாந்தோணிமலை போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து சரண்யாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.