கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே கால்நடை மருத்துவர்கள் எனக்கூறி கறவை மாடுகளை திருட முயன்ற இருவரை விவசாயிகள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த விரியூர் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ். தனது கறவை மாடுகளை அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மாட்டுக் கொட்டகையில் கட்டி வைத்திருந்தார். இவர் நேற்று காலை உணவருந்துவதற்காக வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், இரு நபர்கள் மாட்டுக் கொட்டகையில் கட்டப்பட்டிருந்த மாடுகளை அவிழ்த்து சரக்கு வாகனத்தில் ஏற்றினர். இதைக்கண்ட அப்பகுதி விவசாயிகள், மாடுகளை எதற்காக கொண்டு செல்கிறீர்கள் ? நீங்கள் யார் ? எனக் கேட்டனர்.
அதற்கு அவர்கள் தாங்கள் கால்நடை மருத்துவர்கள் எனவும், கறவை மாடுகளுக்கு சினை ஊசி செலுத்த அழைத்துச் செல்வதாகவும் கூறினர். இதனால் சந்தேகமடைந்த விவசாயிகள், அந்தோணிராஜை தொடர்புகொண்டு இது பற்றி கூறினர். உடனடியாக அங்கு வந்த அந்தோணி ராஜை கண்டதும் இருவரும் தப்பியோட முயன்றனர். பின்னர் விவசாயிகள் இருவரையும் மடக்கிப் பிடித்து சங்கராபுரம் காவல் நிலையத்தில் ஒப்படத்தனர்.
போலீஸார் விசாரணை நடத்தியதில் இருவரும் சிட்டந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த சாந்த குமார் என்பதும், இருவரும் சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாகவே கறவை மாடுகளை திருடியதும் தெரியவந்தது. இது குறித்து அந்தோணி ராஜ் கொடுத்த புகாரின் பேரில் கறவை மாடுகளை திருட முயன்ற இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.