ராமநாதபுரம்: சாயல்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சொர்ணராஜன் மகள் சண்முகப் பிரியா (13). சாயல்குடியைச் சேர்ந்த குகன் மகன் ஹரி சூர்யா பிரகாஷ் (14). சண்முகப் பிரியா சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஹரி சூர்யா பிரகாஷ் சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் 8-ம் வகுப்பு படித்து வந்தனர்.
இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு சாயல்குடி பத்திரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சப்பர ஊர்வலத்தில் பெற்றோருடன் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, வீட்டுக்கு நள்ளிரவில் நடந்து சென்றனர். அப்போது சாயல்குடி காவல் நிலையம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சென்ற போது , ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கார் ஒன்று மாணவர்கள் இருவர் மீதும் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சண்முகப் பிரியா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பலத்த காயமடைந்த ஹரி சூரிய பிரகாஷை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். இது குறித்து சாயல்குடி போலீஸார், கார் ஓட்டுநர் கர்நாடக மாநிலம், மண்டையா பூமால்கவுசை சேர்ந்த சிவா (45) என்பவர் மீது வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர்.