தேனி: தனியார் பள்ளி தாளாளரை தாக்கியது தொடர்பான வழக்கில் பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவரை போலீஸார் கைது செய்தனர்.
தேனி பழனிசெட்டிபட்டி தனியார் பள்ளி தாளாளர் ஸ்டாலின் மைக்கேல். இவருக்கும் நிர்வாக அறங்காவலர் செல்வ மனோகரனுக்கும் பள்ளியை நிர்வகிப்பது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 12ம் தேதி பள்ளி அலுவலகத்துக்கு வந்த செல்வ மனோகரன் உள்ளிட்ட சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தன்னை தாக்கியதாக ஸ்டாலின் மைக்கேல் அளித்த புகாரின் பேரில் செல்வ மனோகரன், கிருஷ்ணன், பாண்டீஸ்வரன், பேரூராட்சித் தலைவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மிதுன் சக்கரவர்த்தி மற்றும் 6 பேர் மீது பழனி செட்டிபட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவர் மிதுன் சக்கரவர்த்தியை போலீஸார் நேற்று கைது செய்தனர்.