கன்னிவாடி வனப்பகுதியில் எரிந்த நிலையில் இளம்பெண் உடல் மீட்பு... தீவிர விசாரணை


திண்டுக்கல்: கன்னிவாடி வனப்பகுதியில் பாதி எரிந்த நிலையில் பெண் உடல் ஒன்று மீட்கப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனப்பகுதி, தருமத்துப்பட்டி- பன்றிமலை இடையே அமைதிச் சோலை என்ற பகுதியில், விறகு எடுத்துக் கொண்டு நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பியவர்கள், எரிந்த நிலையில் பெண் உடல் ஒன்று வனப் பகுதியில் கிடந்ததை பார்த்துள்ளனர். இது குறித்து கன்னிவாடி போலீஸார் மற்றும் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்த போலீஸார் உடனடியாக இரவே அமைதிச் சோலை பகுதிக்கு சென்றனர். ஆதிமூலம் நீரோடை அருகே 60 அடி பள்ளத்தில் பாதி எரிந்த நிலையில் பெண் உடல் கிடந்தது. 25 வயது மதிக்கத்த பெண்ணின் உடலை மீட்ட போலீஸார், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லரி மருத்துவ மனைக்கு அனுப்பினர். நேற்று காலை விசாரணையை தொடங்கிய போலீஸார், முதற்கட்டமாக தருமத்துப்பட்டி- பன்றிமலை மலைச் சாலையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

25 வயது மதிக்கத்தக்க பெண் யாரும் காணாமல் போயுள்ளனரா என அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்து விவரம் சேகரித்து வருகின்றனர். இறந்த பெண் எந்த பகுதியை சேர்ந்தவர், யாரேனும் அழைத்து வந்து கொலை செய்து எரித்துவிட்டு சென்றனரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இறந்த பெண் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து கன்னிவாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x