திருப்பூர்: திருப்பூரில் காடா துணிகள் வாங்கி ரூ.6.36 கோடி மோசடி செய்த குஜராத்தை சேர்ந்த இளைஞரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
திருப்பூர் ஷெரீப் காலனியைச் சேர்ந்தவர் சித்தார்த் குமார் சலேச்சா. இவர் அதே பகுதியில் காடா துணிகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வந்தார். தொழில் நிமித்தமாக குஜராத் மாநிலம் அஹமதாபாத்தைச் சேர்ந்த ரிஷப் பண்டாரி (29), அவரது சகோதரர் திவியங்க் பண்டாரி (26) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த இருவரும் குஜராத்தில் காடா துணிகள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். இருவரும் தங்களது நிறுவனத்துக்கு சித்தார்த் குமார் சலேச்சாவிடம் பல தவணைகளாக ரூ.6.36 கோடிக்கு காடாத் துணிகளை கடந்த 2021, 22-ம் ஆண்டுகளில் வாங்கியுள்ளனர். இதன் பின்னர் துணிகளுக்கான பணத்தைக் கொடுக்காமல் மோசடி செய்ததாகத் தெரிகிறது.
இது குறித்து சித்தார்த் குமார் சலேச்சா திருப்பூர் மாநகர மத்திய குற்றப் பிரிவில் புகார் அளித்தார். மாநகர காவல் ஆணையர் சு.ராஜேந்திரன் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் எஸ்.தாமோதரன் தலைமையில் தனிப்படையினர் அஹமதாபாத், மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருவரையும் தேடி வந்தனர். இதனிடையே, மும்பையில் பதுங்கியிந்த ரிஷப் பண்டாரியை தனிப்படையினர் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள திவியங்க் பண்டாரியை தேடி வருகின்றனர்.