தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் கோழி இறைச்சிக் கடை உரிமையாளர் கொலை தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலக்கோடு அருகே எர்ரன அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (42). இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி முதல் மனைவியை பிரிந்த நிலையில், கோவிந்தம்மாள் (40) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 15 மற்றும் 8 வயதுடைய 2 மகள்கள் உள்ளனர். குமார், பாலக்கோடு அரசு போக்கு வரத்துக் கழக பணிமனை அருகே கோழி இறைச்சிக் கடை நடத்தி வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை அவர் இறைச்சிக் கடையிலேயே காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். தகவல் அறிந்த போலீஸார் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் பாலக்கோடு டிஎஸ்பி மனோகரன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.
போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், குமாரின் மனைவி கோவிந்தம்மாளுக்கு சிலருடன் தகாத நட்பு ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், அந்த பின்னணியில் கொலை நடந்திருக்கலாம் என்றும் தெரிய வந்ததால் அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.