தஞ்சை: அண்ணனை போலீஸார் விசாரணைக்காக அழைத்து சென்றதை கண்டித்து, காவல்நிலையம் முன்பு விஷம் அருந்திய சகோதரி உயிரிழந்துள்ளார். மற்றொரு சகோதரி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த நடுகாவேரி பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (32). இவரை நேற்று விசாரணைக்காக நடுக்காவேரி காவல் ஆய்வாளர் சர்மிளா அழைத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில் தனது சகோதரரை விசாரணைக்கு அழைத்து சென்றதை கண்டித்து அவரது அக்கா துர்கா, மேனகா மற்றும் தங்கை கீர்த்திகா மூவரும் காவல் நிலையத்திற்கு சென்று தனது சகோதரர் தினேஷை விட்டு விடுமாறும், மேலும் மேனகாவிற்கு இன்று நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதால் அவரை விடுவிக்கும்படி கேட்டுள்ளனர்.
ஆனால் அதற்கு காவல் ஆய்வாளர் சர்மிளா அவர் மீது வழக்குகள் உள்ளது. எனவே விட முடியாது என கூறியுள்ளார். மேலும் சகோதரிகளை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவரது இரண்டாவது அக்கா மேனகா மற்றும் தங்கை கீர்த்திகா இருவரும் காவல் நிலையம் முன்பே காவல் ஆய்வாளர் சர்மிளா முன்பு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
சகோதரிகள் விஷம் அருந்தும் போது காவலர்கள் யாரும் தடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. தற்கொலை செய்வது போல் நாடகமாடுவதாக கூறி காவலர்கள் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் இருவரையும் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதில் சிகிச்சை பலனின்றி கீர்த்திகா உயிரிழந்தார். மற்றொரு சகோதரி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல் நிலையம் முன்பு விஷம் குடித்ததில் ஒருவர் உயிரிழந்து மற்றொருவர் ஆபத்தான நிலையில் உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில் உறவினர்கள் கூறுகையில், அதே பகுதியில் ஒரு சிலர் கள்ள சந்தையில் மது விற்பனை செய்வதாகவும், அதில் தனது தந்தை அய்யாவை மது விற்பனை செய்ய கட்டாயப்படுத்தியதாகவும் இதனை தினேஷ் தட்டி கேட்டதால் அடிதடி ஏற்பட்டுள்ளது. மது விற்பனை செய்தவர்களை விட்டுவிட்டு, பொய் வழக்கு போட்டு தனது சகோதரனை அழைத்து சென்றுள்ளனர். இதனைக் கேட்ட சகோதரிகளையும் தர குறைவாக பேசி உள்ளனர். எனவே காவல் ஆய்வாளர் சர்மிளா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள தனது சகோதரனை விடுதலை செய்ய வேண்டும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.