வேலூர்: வேலூரில் பெண் கவுரவ விரிவுரையாளர் அளித்த பாலியல் புகார் வழக்கில் தேடப்பட்டு வந்த ஊரீசு கல்லூரி துணை முதல்வரை தனிப்படை காவலர்கள் கைது செய்தனர்.
வேலூர் அண்ணா சாலையில் உள்ள பிரபல அரசு நிதியுதவி பெறும் ஊரீசு கல்லூரியின் துணை முதல்வராக இருப்பவர் அன்பழகன். இவர், அதே கல்லூரியில் பணியாற்றி வந்த 37 வயது கவுரவ பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, அந்த பெண் அளித்த புகாரின்பேரில் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும், துணை முதல்வர் அன்பழகன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர் தலைமறைவானார். இதற்கிடையில், துணை முதல்வர் அன்பழகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் கடந்த மாதம் 22-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டதுடன், வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து, அன்பழகனை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் விசாரணையில், அவர் ஆந்திர மாநிலம் சித்தூரில் பதுக்கி இருப்பது உறுதி செய்தனர். அவரை நேற்று அதிகாலை கைது செய்து வேலூர் அழைத்து வந்தனர்.