மதுரையில் ஓய்வுபெற்ற டிஎஸ்பி தற்கொலை? - பூட்டிய வீட்டில் இருந்து உடல் மீட்பு


மதுரை: மதுரை அருகே ஓய்வுபெற்ற டிஎஸ்பி மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர். சிவகங்கையைச் சேர்ந்தவர் துரைசிங்கம் (65). இவர் சிவகங்கை ஆயுதப்படையில் டிஎஸ்பியாக பணிபுரிந்தார். பின்னர் போலீஸ் பயிற்சி பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

இவரது மனைவி உயிரிழந்த நிலையில், மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அருகிலுள்ள வீரபாண்டியில் தனியாக வசித்தார். திருமணமான இவரது ஒரே மகன் பிரதாப் சென்னையில் வசிக்கிறார். துரைசிங்கத்துக்கு ஏற்கெனவே இதயம், கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு, அதற்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் 2 நாட்களாகவே அவரது வீடு பூட்டப்பட்டு இருந்தது. நேற்று காலை வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம், பக்கத்தினர் ஊமச்சிகுளம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். காவல் ஆய்வாளர் சாந்தி உள்ளிட்ட போலீஸார் கதவை உடைத்துப் பார்த்தபோது, கட்டிலில் துரைசிங்கம் உடல் அழுகிய நிலையில் கிடந்தது.

உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பினர். உடல் நிலை பாதித்த நிலையில், கவனிக்க யாரும் இல்லாமல் இருந்ததால் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அவர் அணிந்து இருந்த நகைகள், பெட்டியில் வைத்திருந்த நகை உள்ளிட்ட சில ஆவணங்கள் அப்படியே இருந்தன. இது குறித்து சென்னையிலுள்ள அவரது மகன் பிரதாப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மதுரை விரைந்தார். போலீஸார் அவரிடம் விசாரிக்கின்றனர்.

x