செஞ்சியில் பட்டா மாற்ற ரூ.5 ஆயிரம் லஞ்சம்: விஏஓ கைது


செஞ்சி: இரும்புலி, கண்டமநல்லூர், உடையந்தாங்கல் ஆகிய கிராமங்களுக்கு கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் திருநாவுக்கரசு. கடந்த பிப்.14ம் தேதி உடையாந்தாங்கலைச் சேர்ந்த சுந்தரேசன் மகன் சுபாஷ் (30) என்பவர் அதே ஊரைச் சேர்ந்த சுதாகர் என்பவரிடம் இருந்து 17 சென்ட் நிலத்தை வாங்கினார். இந்நிலத்தின் பட்டா மாறுதலுக்காக கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசுவை சுபாஷ் அணுகினார்.

இதையடுத்து திருநாவுக்கரசு பட்டா மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இது குறித்து சுபாஷ் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார். இந்நிலையில் நேற்று செஞ்சியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இருந்த திருநாவுக்கரசுவிடம் சுபாஷ் லஞ்ச பணம் ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார்.

அப்போது விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர் அழகேசன், இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சக்கரபாணி தலைமையிலா ன போலீஸார் கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசுவை கைது செய்தனர். தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x