தூங்கிக்கொண்டிருந்த இளைஞரை எழுப்பி வெட்டிக்கொலை: மதுரை அருகே பயங்கரம்


அழகர்சாமி

மதுரை: மதுரை அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இளைஞரை அதிகாலையில் எழுப்பி கும்பல் வெட்டிக் கொன்றது. கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் சிலைமானைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் அழகர்சாமி (19). இவர் 9-ம் வகுப்பு படித்துவிட்டு கூலி வேலைக்குச் சென்று வந்தார். நேற்று முன்தினம் வேலைக்குச் சென்றுவிட்டு இரவில் வீட்டுக்கு வந்து தூங்கினார்.

நேற்று அதிகாலை சுமார் 3 மணிக்கு அழகர்சாமியின் வீட்டுக்கு 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று சென்றது. அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் வீட்டின் கதவைத் தட்டி அழகர்சாமியை வெளியே வரும்படி அழைத்தனர். வெளியே வந்த அழகர்சாமியை கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரி வெட்டிக் கொன்று தப்பியது.

இது பற்றி தகவல் அறிந்த சிலைமான் காவல் ஆய்வாளர் லட்சுமி லதா உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அழகர்சாமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நேற்று முன்தினம் இரவில் அழகர்சாமி மற்றும் சிலர் சேர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மற்றொரு கொலையில் 2 பேர் கைது: மதுரை சிக்கந்தர்சாவடியைச் சேர்ந்தவர் கமலேஷ் (26). இவர் நேற்று முன்தினம் இரவு கொலை செய்யப்பட்டார். அப்பகுதியைச் சேர்ந்த சுந்தரழகனின் காதல் திருமணம் பற்றி கமலேஷ் அவதூறாகப் பேசியதால், ஆத்திரத்தில் சுந்தரழகனும், அவரது சகோதரர் அழகு ராஜேஷும் சேர்ந்து கமலேஷை கொலை செய்தது தெரிந்தது. இருவரையும் அலங்காநல்லூர் போலீஸார் கைது செய்தனர்.

x