கோவை: கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்(38). தனியார் நிறுவனத்தில் முதுநிலை மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் இவரை சமூக வலைதளம் மூலம் தொடர்புகொண்ட நிஷா பாசு என்பவர், ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து அந்நபர் கூறியபடி, வங்கியின் மூலம் பல்வேறு தவணைகளில் 39 லட்சத்து 66 ஆயிரத்து 654 ரூபாயை ஸ்ரீகாந்த் முதலீடு செய்தார். ஆனால், முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியவில்லை. தன்னிடம் பேசிய நபரின் செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
அதன் பின்னரே, தான் மோசடி செய்யப்பட்டது அவருக்கு தெரிந்தது. இதுகுறித்து ஸ்ரீகாந்த் நேற்று முன்தினம் கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். மோசடி, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.