கோவை: கோவையில் ரயில் தண்டவாளத்தில் ‘சிலாப்’ கற்கள் வைத்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை இருகூர் - பீளமேடு இடையே ரயில் தண்டவாளத்தில் அடுத்தடுத்து ‘சிலாப்’ கற்கள் வைக்கப்பட்டிருக்கும் தகவல் கோவை ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து டிஎஸ்பி பாபு தலைமையிலான ரயில்வே போலீஸார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று, தண்டவாளத்தில் மூன்று இடங்களில் வைக்கப்பட்டிருந்த ‘சிலாப்’ கற்களை அகற்றினர்.
அந்த வழித்தடத்தின் வழியாக அன்றைய தினம் இரவு மங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ், மேட்டுப்பாளையம் - சென்னை எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் - பாட்னா எக்ஸ்பிரஸ், கோவை - சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் அடுத்தடுத்து வர இருந்தன. எனவே, ரயிலை கவிழ்க்க திட்டமிட்டு, மர்ம நபர்கள் ‘ஸ்லாப்’ கற்களை வைத்துச் சென்றனரா என போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.
அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அங்கு நடமாடிய இருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் நீலகிரி மாவட்டம் கோடநாடு பகுதியைச் சேர்ந்த விஜய்(34), பீளமேடு தண்ணீர் பந்தல் சாலையைச் சேர்ந்த திருமூர்த்தி(44) எனத் தெரியவந்தது.
கோவை ரயில்வே போலீஸார் கூறும்போது, ‘‘கோவை - சேலம் மார்க்கத்தில் அடுத்தடுத்து இரு இடங்களிலும், சேலம் - கோவை மார்க்கத்தில் ஓரிடத்திலும் பெரிய கற்கள் வைக்கப்பட்டு இருந்தன. பிடிபட்ட இருவரும் மதுபோதையில் கற்களை தண்டவாளத்தில் போட்டுச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.