தென்காசி: தென்காசி மாவட்டம், சிவகிரியைச் சேர்ந்த 15 வயது சிறுமி காணாமல் போனதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிவகிரி காவல் நிலையத்தில் அவரது தந்தை புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சிறுமியை தேடி வந்தனர்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காவல் நிலையத்தில் 15 வயது சிறுமி புகார் அளித்தார். அதில், சிவகிரியைச் சேர்ந்த தன்னை சிவகிரி அருகே உள்ள வலசை கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (20) என்பவர் ஏமாற்றி அழைத்து வந்து, திருமணம் செய்து கொடுமைப்படுத்துவதாக கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, சிவகிரி போலீஸாருக்கு குமாரபாளையம் போலீஸார் தகவல் அளித்தனர்.
சிவகிரி போலீஸார், குமாரபாளையத்துக்கு சென்று, அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தனது மகள் காணாமல் போனதாக ஏற்கெனவே காவல் நிலையத்தில் புகார் அளித்தவரின் மகள் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து, செல்வத்தை கைது செய்தனர்.
மேலும், சிறுமியை திருமணம் செய்ய செல்வத்துக்கு உடந்தையாக இருந்த வலசை கிராமத்தைச் சேர்ந்த உறவினர்கள் முத்தையா மனைவி காளியம்மாள் (40), முருகன் (39) மற்றும் முருகனின் மனைவி முத்துலட்சுமி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.