கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்ட வழக்கில், செங்கல் சூளை உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர்.
போச்சம்பள்ளி அருகே மடத்தானூர் பகுதியைச் சேர்ந்த தங்க முத்து (55) என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் சிலரை கொத்தடிமைகளாக வைத்திருப்பதாகப் புகார் வந்தது. இதையடுத்து, கடந்த 7-ம் தேதி வட்டாட்சியர் சத்யா தலைமையில் அதிகாரிகள் குழு செங்கல் சூளையில் ஆய்வு செய்தனர். இதில், ஊத்தங்கரை வட்டம் மூன்றம்பட்டி அருகே உள்ள ஒபுலிகவலசை பகுதியைச் சேர்ந்த சிலரைக் கொத்தடிமையாக வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அங்கிருந்த தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். மேலும், இதுதொடர்பான புகாரின் பேரில், போச்சம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து, செங்கல் சூளை உரிமையாளர் தங்கத்தைக் கைது செய்தனர்.