வண்டலூரில் கூடா நட்பால் கொடூரம்: காட்டுக்கு அழைத்து சென்று பெண் கொலை; காதலன் கைது


வண்டலூர்: பெண்ணை காட்டுக்குள் அழைத்துச் சென்று கொலை செய்தவரை போலீஸார் கைது செய்து, அழுகிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டனர்.

வண்டலூர் அடுத்த நல்லம்பாக்கம், திருநாராயணபுரம், அன்னை சத்யா தெருவை சேர்ந்தவர் டெய்லர் சங்கர் (46). இவருக்கு மனைவி செல்வராணி (38), மகன், மகள் உள்ளனர். இதில் செல்வராணி மேலக்கோட்டையூரில் உள்ள ஐஐஐடி கல்லூரியில் பணியாற்றி வந்தார். அதே கல்லூரியில் எலக்ட்ரீஷியனாக வேலை செய்யும் குமரேசன் (31) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு நாளடைவில் தகாத உறவாக மாறியது. இதனிடையே அதே கல்லூரியில் பணியாற்றும் கோபாலகிருஷ்ணன் என்பவருடன் செல்வராணிக்கு நெருக்கும் ஏற்பட்டது. இதனால் குமரேசனுடன் பழகுவதை செல்வராணி நிறுத்தினர்.

இந்நிலையில், கடந்த 3-ம் தேதி வீட்டிலிருந்து சென்ற செல்வராணி மாலை வீடு திரும்பவில்லை. இது குறித்து கணவர் சங்கர் தாழம்பூர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, செல்வராணியின் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தனர்.

இதை அடுத்து நேற்று முன்தினம் இரவு குமரேசனை பிடித்து விசாரணை செய்தபோது அவர் செல்வராணியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவர் கூறும்போது, ``என்னுடன் இருந்த தொடர்பை செல்வராணி துண்டித்ததால் ஆத்திரத்தில் இருந்தேன். எனது மகனுக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது என்று கூறி செல்வராணி நம்பவைத்து கடந்த 3-ம் தேதி எனது பைக்கில் செல்வராணியை கீரப்பாக்கத்திலிருந்து கல்வாய் செல்லும் சாலை ஓரத்தில் உள்ள குமிழி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று அவரது துப்பட்டாவில் கழுத்தை நெறித்து கொலை செய்தேன்'' என வாக்குமூலம் அளித்ததாக போலீஸார் கூறினர்.

இதனையடுத்து குமரேசனை போலீஸார் அழைத்துச் சென்று காட்டில் அழுகிய நிலையில் இருந்த செல்வராணியின் சடலத்தைக் கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து குமரேசனிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த இடம் காயார் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால், வழக்கு காயார் காவல் நிலையத்துக்கு விரைவில் மாற்றப்பட உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

x