குரங்குகளை கொன்று சமைத்து சாப்பிட்ட 2 பேர் கைது: திண்டுக்கல் அதிர்ச்சி


திண்டுக்கல்: தவசிமடை வீரசின்னம்பட்டியில் தொல்லை கொடுத்த குரங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள தவசிமடை வீரசின்னம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜாராம் (33). இவரது தோட்டத்தில் குரங்குகள் தொல்லை இருந்துள்ளது. அதைக் கட்டுப்படுத்த வடுகம்பட்டியைச் சேர்ந்த ஜெயமணி (31) என்பவருடன் சேர்ந்து நாட்டுத் துப்பாக்கியால் குரங்குளை சுட்டு வேட்டையாடி, அதில் 2 குரங்குகளை சமைத்தும் சாப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. திண்டுக்கல் வனச்சரக அலுவலர் மதிவாணன் தலைமையில் வனப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கு நடத்திய சோதனையில், 2 குரங்குகளை வேட்டையாடி, அதன் தோல்களை தோட்டத்தில் புதைத்து வைத்திருந்து தெரியவந்தது.

இதையடுத்து, ராஜாராம், ஜெயமணி ஆகிய இருவரையும் கைது செய்து, வேட்டைக்குப் பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி, வெடிமருந்து மற்றும் குரங்கு தோல்களை பறிமுதல் செய்தனர்.

x