அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: திருவள்ளூர் பிஆர்ஓ அலுவலக போட்டோகிராபர் கைது


திருவள்ளூர்: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.22 லட்சம் மோசடி செய்த திருவள்ளூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை போட்டோகிராபரை நாமகிரிப்பேட்டை போலீஸார் கைது செய்தனர்.

ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை குல்லாண்டிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கே.சந்தான மூர்த்தி (44). இவர் திருவள்ளூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் போட்டோகிராபராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ம் தேதி ராசிபுரம் அருகே வெண்ணந்தூர் கல்கட்டனூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி செல்வகுமார் (25) என்பவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.22 லட்சம் வாங்கியுள்ளார்.

எனினும் அவர் கூறியபடி அரசு வேலை எதுவும் வாங்கித் தரவில்லை. எனவே கொடுத்த பணத்தை செல்வகுமார் திரும்பக் கேட்டுள்ளார். ஆனால் பணத்தை தருவதாகக் கூறி சந்தானம் அலைக்கழிப்பு செய்து வந்துள்ளார். இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செல்வகுமார் புகார் அளித்தார். புகார் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளும்படி நாமகிரிப்பேட்டை போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

போலீஸ் எஸ்பி உத்தரவின் பேரில் நாமகிரிப்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சந்தானம் அரசு பணி வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நாமகிரிப் பேட்டை போலீஸார், போட்டோகிராபர் சந்தானமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x