விருதுநகர்: நரிக்குடி அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த இளைஞர், நேற்று வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள மானூர் இந்திரா நகர் காலனியை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (21).நரிக்குடி முக்குரோடு பகுதியில் உள்ள இருசக்கர வாகன பழுது நீக்கும் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை நரிக்குடி போலீஸார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், ராஜேஷ் கண்ணன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நரிக்குடியில் உள்ள ஏடிஎம் மையத்தில் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது.
இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ராஜேஷ் கண்ணன் உட்பட 4 பேரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று நரிக்குடி போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர், இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியைச் சேர்ந்த சாமியப்பன் (23) என்பவரை கைது செய்தனர். இந்நிலையில் தற்போது ராஜேஷ் கண்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.