தஞ்சாவூரை அடுத்த புன்னைநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் கடந்த சில மாதங்களாக பணம் மற்றும் நாணயங்கள் திருடுபோவதாக புகார்கள் எழுந்து வந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் காந்தம் மூலம் நூதன முறையில் கோயில் உண்டியலில் இருந்து பணம், நாணயங்களை திருடுவதை கோயில் ஊழியர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, அந்த இளைஞரை அவர்கள் பிடிக்க முயற்சித்தபோது, அவர் தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், தஞ்சாவூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், காந்தத்தை வைத்து உண்டியலில் பணம் திருடியது தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் கங்காதரபுரம் மேலத் தெருவைச் சேர்ந்த அய்யப்பன் (24) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அய்யப்பனை பிடித்து போலீஸார் விசாரித்தபோது, அவர் ஏற்கெனவே இதுபோன்று பலமுறை காந்தத்தை வைத்து உண்டியலில் பணம், நாணயங்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.