தருமபுரியில் கூடா நட்புக்கு இடையூறாக இருந்த கணவரை கடத்த கூலிப்படை: மனைவி உட்பட 4 பேர் கைது


தருமபுரி: கடத்தூர் அருகே கணவரை கடத்த கூலிப்படை அனுப்பிய மனைவி மற்றும் அவரது நண்பர் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள ஒடசல்பட்டி பகுதியைச் சேர்ந்த ஓட்டல் தொழிலாளியான பிரதாப் (32) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிவரஞ்சனி (22) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 17-ம் தேதி இரவு 11 மணிக்கு பிரதாப் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும்போது முகமூடி அணிந்த 3 பேர் அவரை தாக்கி காரில் கடத்த முயன்றனர். அவர் கூச்சலிடவே சத்தம் கேட்டு அவரது தாய் சுமதி, தம்பி இளவரசன் ஆகியோர் அங்கு வந்தனர். உடனே பிரதாப்பை விட்டுவிட்டு அந்த கும்பல் காரில் தப்பியது.

இந்நிலையில் தன்னை தாக்கி கடத்த முயன்ற கும்பல் குறித்து கடந்த 20-ம் தேதி கடத்தூர் காவல் நிலையத்தில் பிரதாப் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இதில், பிரதாப்பின் மனைவி சிவரஞ்சனிக்கும், ஓடசல்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்த கவுதம் ராஜ் (28) என்பவருக்கும் இடையே கூடா நட்பு இருப்பது தெரியவந்தது.

ரஞ்சனி கூறியதன்பேரில் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தாஸ் (27), பிரவின் குமார் (24) ஆகியோருடன் சேர்ந்து பிரதாப்பை கவுதம் ராஜ் கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து கவுதம் ராஜ், தாஸ், பிரவீன் குமார் மற்றும் சிவரஞ்சனி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் 4 பேரையும் பாப்பிரெட்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிவரஞ்சினியை தருமபுரி கிளை சிறையிலும், மற்ற மூன்று பேரையும் அரூர் கிளை சிறையிலும் அடைத்தனர்.

x